பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காலந்தோறும் பெண் பழங்காலத்தில், ஆண், பெண், ஊமை, செவிடு நோயுற்றவர், வனங்களில் வசித்த பழங்குடி மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்குமே உபநயனம்’ என்ற கல்விக் கண்ணைப் பெறும் உரிமை இருந்ததென்று கண்டோம். ருக்வேதம் பெண்ணை எட்டு வயசில் தாலிக்குத் தலைநீட்டச் சொல்லவில்லை. ஆனால் அதே வேதத்தில் 'புருஷ ஸூக்தம்’ என்ற பகுதி மானுட சமுதாயத்தின் பாரபட்சமான வருண முறைப் பாகுபாட்டை நியாயப்படுத்துகிறது. நான்காவது வருணத்தார் என்ற ஒரு பிரிவினரை எந்தக் காரணமும் இன்றிக் குழியில் தள்ளுகிறது. எழுத்து வடிவம் பெற்றிராத வேதமொழி ஒலி வடிவங்களிலேயே தொன்று தொட்டுத் துலங்கியது; மக்கள் குலத்தை வாழ வைத்தது. சமுதாய நலம் கருதிச் செய்யப் பெறும் வேள்விகளுக்கு இந்த ஒலி வடிவங்களே உயிர் நல்கின. எனவே இந்த வேதங்களைத் தம் மூலாதாரங்களிலிருந்து நாவின் ஒலிப்பூக்களாய் வெளியிடவும், அற்புத ஆற்றலுடன் அவற்றை நினைவில் சுமந்து பாதுகாக்கவும் ஒரு சாரார் பழகினார்கள். அவர்கள் மக்கட்குலத்தின் மேலாம் பணியைச் செய்ததால் முதல் வருணத்துக்கு உரியவர்களாக ஆனார்கள். இந்த வருணத்தாருக்கு, உணவு, மற்றும் உயிர் வாழத் தேவையான பொருளுக்கு உழைக்கும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. தோள்வலியும் வாள்வலியும் கொண்டு பகைவர் மற்றும் கொடிய கானக விலங்குகளிட மிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பிரிவினரும், மண்ணில் விளைத்தும், வேட்டையாடியும், உணவைச் சேமித்துச் சமுதாயத்துக்களித்த பிரிவினரும், முதல் பிரிவினரை மேலாகக் கருதி அளிக்கும் தானத்தைப் பெறவும் உரிமை பெற்றிருந்தனர். தானம் பெறுவது எதற்காக?