பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ◆ காலந்தோறும் பெண்

'அவளும் அவனும் பார்த்தார்கள்; காதலித்தார்கள்; கல்யாணம் ஆயிற்று. மாமியார், நாத்தனார் குடும்பத் தகராறுகள் வந்தன என்ற மாதிரியில் கதை பின்னுவதற்கு, அறிவார்ந்த சிந்தனைகள் தேவையில்லை; கண்ணீரை வரவழைக்கவும், மனமுருகச் செய்யவும் உணர்வூக்கிகளே போதும்' என்ற கருத்தை வைத்து, ஒரு பேராசிரியப் பெண்மணி விவாதம் செய்தார். நான் அந்தப் பேராசிரிய அறிஞர் பெண்மணிகளின் விவாதத்தில் கலந்து கொள்ள வில்லை. வெறும் பார்வையாளராகவே அமர்ந்திருந்தேன். இந்தக் கருத்து எனக்கு முற்றிலும் புதிதன்றுதான்.

பெண் எழுத்தாளரிடம் அறிவுபூர்வமாகச் சிந்தனைகளோ தர்க்கரீதியான கருத்தாராய்வுகளையோ எதிர்பார்ப்பதற்கில்லை என்று நமது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமரிசக மேதைகள் சிலர், தீர்த்திருக்கிறார்கள்.

அலுவலகத்திலிருந்து கணவன் களைத்து வருவதை எதிர்பார்த்துக் கையில் மணமிகுந்த காபியை வைத்துக் கொண்டு காத்திருக்கும் மனைவியைச் சித்தரிப்பதுதான் அவர்களுக்குப் பொருத்தமான இலக்கியம் என்று ஒரு முடிவை, அந்தத் தீர்ப்பில் அவர்கள் குஞ்சம் கட்டிவிட்டாற் போல் எனக்குத் தோன்றியிராமல் இல்லை.

என்னை நானே அலசிப் பார்த்துக்கொள்ளும் அவசியம்கூட நேரிட்டது.

கதைதான் எழுதுகிறோம் என்றாலும், நிகழ்ச்சிகளைக் கோத்து, பிரச்சினைகளை மோதவிட்டு, கதை மாந்தர்களை உயிரும் வடிவுமாக உலவ விடுகையில் , இயங்க வைக்கையில், ஓர் இலக்கியப் படைப்பாளியின் படைப்பு அவஸ்தையில், பங்கேற்பது இந்த உணர்ச்சி நெகிழ்ச்சி அம்சங்கள் மட்டும்தானா? அசலிலிருந்து நகலின் பிரதியெடுக்கையில், மூலமான வாழ்க்கையில் யதார்த்தங்களிலிருந்து படிவங்களை ஒரு படைப்பாளி நேர்ந்து கைக்கொள்ளுகையில், கோத்து