பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

17


முட்டாள். ‘செத்தவன் பிழைப்பானா’ என்னும் பழ மொழி கூட உனக்குத் தெரியாதா?” என்றனன். “ஹா! ஹா! இப்போதுதான் நீங்கள் எனக்கு உண்மை நண்பர் எனக் கண்டேன். உண்மை நண்பர் தாம் இவ்வாறு இடித்து நல்லுரை கூறுவார். மனக் கோட்டையோ மணற்கோட்டையோ! இன்றிரவு என் சொந்த வீட்டில் தான் எனக்குச் சாப்பாடு; பாருங்கள் இதன் உண்மையை” என்றனன் கடோரசித்தன். அதற்குச் சங்கிலிக்கருப்பன் “நீ இப்போது சொன்னது உண்மையானால் நீ உன் பழைய உடலிற் புகுந்து, உணவு உண்டு, உண்மையாகவே ஊனும் உயிருமாய் இருக்கின்றோம் எனத் தேர்ந்தவுடன் ‘சங்கிலிக்கறுப்பா’ என என்னை மும்முறை கூவுக. காலன் உன்னை மறுபடியுந் தேடி வருமுன் நான் உனக்குப் பெருமாளிடம் வரம் வாங்கித் தருகின்றேன்; பார்” என்றனன். “மெத்த சரி” என்றனன் கடோர சித்தன். சங்கிலிக் கறுப்பனும் தனது மனதுக்குள் "ஹா! இவன் சரியான பேர்வழி: இவன் இருக்கும் இடமெலாம் கிளர்ச்சியே” எனச் சொல்லிக் கொண்டே வழி நடந்தனன். இருவரும் யமதரும்ராஜர் வீற்றிருக்கும் நரகலோகம் வந்து சேர்ந்தனர்.

நரக லோகத்தைச் சுற்றி ஒரு பெரிய ஆறு ஒன்பது சுற்றாக ஒடுகின்றது. அந்த ஆற்றைக் கடந்து சென்றால் தான் யமபட்டணம். அந்த ஆற்றங்கரையிற் கடோரசித்தனுடைய உயிரை விட்டு விட்டுச் சங்கிலிக் கறுப்பன் போய் விட்டான். போகும் போது “இன்றிரவு! சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றனன்