பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

25


கொண்டு பூஜை முதலிய நடப்பித்தான். கண்ணபுரமே இத்தேசங்களுக் கெல்லாம் தலை நகராயிற்று. குக்கிராம மாய் இருந்த அவ்வூர் வானளாவும் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களுமாய் விளங்கிற்று. காடுஞ் செடியுங் கள்ளரும் மிருகங்களுமாயிருந்த இடங்களெல்லாம் வயலும் நீரும் வீடும் குடியுமாய் இலகின. கோயில்களையுங் குளங்களையுங் கடோரசித்தன் கட்டினது பத்தி காரணமாக அல்ல, தன்னை யாவருங் கொண்டாட வேண்டும் என்னும் பெருமை காரணமாகத் தான். வரி, கப்பம், வியாபார லாபம் எனப் பலவழியாகப் பொருளைச்சேகரித்தான். பல்லாண்டு இவ்வாறு சகல செல்வ போகங்களின் இடையே களிப்புடன் இறுமாந்திருந்தான். பின்னர், வயது செல்லச் செல்ல மூப்பின் இலக்கணங்கள் வெளிப்பட்டன. நரை திரை ஏறின; வாய்ப்பல் உதிர்ந்தது; மொழி தளர்ந்தது; முதுகு வளைந்தது, நோக்கம் இருண்டது; இருமல் வந்தது; தூக்கம் போயிற்று. ஏக்கம் ஆயிற்று. நோய் பிடித்தது, பாய் விடேன் என்றது; சலமலங்களின் நாற்ற மெழுந்தது, காடு வா என்றது; வீடு போ என்றது; கடவுளை ஏமாற்றி விட்டோம் என்று மனிதர் நினைப்பது வழக்கம் கடவுள் ஏமாறவில்லை என்பது ஈற்றில் தான் புலப்படும்; நோயிலா வாழ்வுதானே வாழ்வு. நோய் முதிர முதிரத் தான் ஈட்டிய செல்வ மெல்லாம் செல்வமாகத் தோன்ற வில்லை. விருந்துணவு மருந்துணவு ஆயிற்று. பொருள் பொக்கிஷத்தில், பிரபு படுக்கையில் என்றாயிற்று. நோயின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் ஒரு நாள் இரவு “யமதருமராஜரே என்னைக்கொண்டு போம்” எனத் தன்னை மறந்து முறையிட்டு அழுதான். உடனே