பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

காலனைக் கட்டி யடக்கிய


களையுந் தருவான். அவனுக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களைத் தந்து தானே அவனை அலங்கரிப்பான். இவ்வாறு, காலனுங் கள்ளனும் ஆப்த சிநேகிதர்களாய் நித்தம் உண்டு களிக்குங் காட்சி ஒர் அரிய விநோதக் காட்சியா யிருந்தது. மனிதனுங் காலனும் நட்பினராய் ஒன்று கூடிக் களிப்பதை இப்போதுதான் கண்டேன் என வானம் நகைப்பதுபோல வான்மீன்கள் (நஷத்திரங்கள்) விளங்கின. நித்தம் பொழுது விடியுமட்டும் மனிதனுங் கூற்றுவனும் பேசி விளையாடுவார்கள். நரகலோகத்து விஷயங்களும் ரகசியங்களும் கடோர சித்தன் காலன்வாய்க் கேட்டுணர்ந்தான். நிற்க. சகல மாயைக்கும் மூலாதாரமான மூர்த்தியாம் பெருமான் ஸ்ரீமந் நாராயணமூர்த்தி “என்ன? மூவுலகினின்றும் தோத்திரமுங் காணோம். பிரார்த்தனையுங் காணோம். தபமெங்கே? தூபமெங்கே? ஒன்றுங் காணோமே. கடோரசித்தன் காலன்வாய்ப்பட்ட பிறகு மன்னுயிர்கள் இனிக்கடவுளை வேண்டி வருத்தவேண்டாம் என்று சும்மா இருக்கின்றார்களோ?” என நினைத்தனர். அச்சமயம், நாரத முனிவர் அங்கு வந்து தோன்றி வணங்கினர். பெருமாளும் “அன்ப! நாரத! நல்ல சமயத்தில் வந்தாய். மூவுலகில் ஏதேனும் விசேஷ முண்டோ? கடோரசித்தன் காலன் கையிற் பிணிப்புற்ற பின்னர் அங்கு என்ன விசேஷம்?” என வினவினர். நாரதரும் “மதுசூதனரே! கடோரசித்தன் காலன் கையிற் பிணிப்புற இல்லை. காலன் கடோரசித்தன் கையில் பிணிப்புண்டிருக்கிறான். காலன் இவ்வாறு கட்டியடக்கப் பட்டது முதல் உலகிலுள்ளோர் ஒரே குதுகலமாய் இருக்கின்றார்கள். இறத்தல் என்பது ஒன்று உண்டு