பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவை நோன்பு

93

 பெறுகின்றன. இவற்றுள் பல ஒற்றுமையாகவும் இருக்கின்றன. ஒன்றை மட்டிலும் இவ்விடத்தில் நோக்குவோம். கோகுலத்திலுள்ள பெண்கள் கூட்டம் ஒன்று தோழி ஒருத்தியைத் துயிலெழுப்புவதற்காக அவள் வீட்டையடைகின்றது. முதல் நாள் அப்பெண்களிடம் "நாளை நானே வந்து உங்களே எழுப்புவேன்!” என்று கூறினவள் அவள். அவள் இன்னும் எழுந்து கூட்டத்துடன் கலந்துகொள்ளவில்லை. அவள் வீட்டை யடைந்த கூட்டம்,

"எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்"

திருப்பாவை-14.

[நாணாதாய்-வெட்கமில்லாதளே]

என்று கூப்பிட்டு அவளை எழுப்புகின்றது. இந்தத் திருப்பாவை அடிகளை,

"மானே நீ நென்னலே நான்வந்து உங்களே,
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ"

-திருவெம்பாவை-6

(நென்னல் - நேற்று; புலர்ந்தின்றே - பொழுது விடியவில்லையோ?)

என்ற திருவெம்பாவை அடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.திருவண்ணாமலேயிலுள்ள பெண்கள்கூட்டம்ஒன்று, “உங்களை நாளை நானே வந்து துயிலுணர்த்துவேன்!” என்று சொன்ன ஒருத்தியின் வீட்டிற்கு வந்து எழுப்புவதாக அமைந்த காட்சியை இவ்வடிகள் சித்திரிக்கின்றன. இவ்வாறு ஒற்றுமையுடைய செய்திகள் இரண்டிலும் உள்ளன.

ஐந்தாவதாக : இரண்டு பிரபந்தங்களும் நோன்பின் பயனைக் கிட்டத்தட்ட ஒரே விதமாகவே குறிக்கின்றன.