பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

காலமும் கவிஞர்களும்


யினையும் பளிங்குபோல் எடுத்துக் காட்டுகின்றன. அவை சங்ககாலத் தமிழர்களின் கலைவளத்தையும் உயர் நிலையினையும் புலப்படுத்துகின்றன; தமிழ் அணங்கின் கன்னிப் பருவ எழிலை வீசி நிற்கின்றன. கற்பனைக்கும் உயர்வு நவிற்சிக்கும் அவைகளில் இடம் இல்லை. பிற பண்பாடு தமிழ்ப் பண்பாட்டுடன் கலக்கத் தொடங்கிய நாள் தொட்டுத் தமிழர் வாழ்வில் மாறுபாடு தென்பட்டது. வீரத்திலும் காதலிலும் ஈடுபட்ட தமிழர் கருத்தில் ஒழுக்க உணர்ச்சியும் தெய்வ பக்தியும் சிறப்பிடம் கொள்ளலாயின. பௌத்த சமயமும் சமண சமயமும் சில காலம் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அக்காலத்தில் அச் சமயத் துறவிகள் மெய்ப்பொருளியல் நூல்களையும் இலக்கண இலக்கிய நூல்களையும் இயற்றினர். நாளடைவில் சைவ வைணவ சமயங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பக்தி இயக்கம் வீறுடன் எழுந்து தமிழ் நாடெங்கும் பெருக்கெடுத்துப் பரவிற்று. இக்காலத்தில் வாழ்ந்த அப்பர், சம்பந்தர்,சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தத்துவம் பொதிந்த தேனினும் இனிய தோத்திரப் பாடல்களைப் பாடிக் குவித்தனர், ஆழ்வார்களும் கல்நெஞ்சத்தையும் கனிவிக்கும் இன்பப் பாசுரங்களை அருளிச் செய்தனர். பக்தி இயக்கம் பொதுமக்கள் இயக்கமாக விளங்கியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஞானச் செல்வர்களேயாயினும், அவர்கள் வெறும் அறிவுக்கு மட்டிலும் ஆளாகியவர்கள் அல்லர் ; அறிவுக்கும் எட்டாத பரம்பொருளை அகத்துள் உணர்ந்து அதற்கே ஆளான பக்திப் பெருமக்கள். ஆனதால்தான், அவர்கள் பொது மக்களுடைய ஆதரவைப் பெருத்த அளவில் பெற முடிந்தது. சமய நெறியையும் மெய்ப்பொருள் உண்மையையும் சமயக் கடவுளர் பற்றிய வரலாறுகளையும் பொதுமக்கள்