பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலமும் கவிஞர்களும்

5


கேட்டுணரப் பெரிதும் விழைந்தனர். அரசர்களையும் அரச குடும்பத்தினர்களையும் பக்தி இயக்கம் ஈர்த்தது. எனவே, அவர்கள் அவ் வியக்கத்திற்குப் பேராதரவு காட்டினர். ஆம்; அரசர்களும் மனிதர்கள்தாமே? பக்தி இயக்கம் கோயில்களுக்கு முக்கியத்துவம் அளித்தது. வானளாவும் கோபுரங்களைக் கொண்ட பல கோயில்கள் எழுந்தன; சிற்பம் போன்ற பல கலைகள் செழித்தன. அக்காலத்தில் எழுந்த பாடல்கள் பொது மக்கள் வாழ்வைப் பெரிதும் பிரதிபலித்துக் காட்டுவதை அறியலாம்.

பக்தி இயக்கம் சிறப்புற்றோங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் சமணச் சான்றோர்கள் தம் சமயத்தைப் பரப்ப இயலவில்லை; தம் சமயச் சார்பான நூல்களைச் செய்தாலும், மக்களிடையே அவை ஓரளவு நன்மதிப்பைப் பெற்றாலும் செல்வாக்குப் பெறவில்லை. உலக வாழ்வில் வெறுப்பும், துறவு நெறியில் விருப்பும் கொண்டிருந்த அவர்களால் தமிழர் வாழ்வில் உரம் பெற்றிருந்த அகப் பொருள் நலங்களும் புறப்பொருள் துறைகளும் மலிந்த நூல்களை இயற்ற முடியவில்லை. பக்தி இயக்க வெள்ளம் பெருகியோடிய காலத்தில் அவர்கள் தமிழ் மொழியின் இலக்கணத் துறையில் பெருந்தொண்டு புரிந்தனர்; செய்யுளியலில் பல புதுநெறிகளையும் இயல்களையும் கண்டனர். கற்றவர்களையும் மற்றவர்களையும் பிணிக்கக் கூடிய பல புது யாப்பு வகைகளையும் அணிவகைகளையும் தமிழ் மொழிக்குக் கொணர்ந்தனர். பல புதிய பாவினங்கள் தமிழ் மொழியில் வழங்கி வருவதற்கு அவர்களே முதற் காரணமாவர். நிகண்டுகளை உருவாக்கிய வர்களும் அவர்களே. இடைக்காலத் தமிழர் வாழ்வில் வைதிக சமயக் கருத்துக்கள் வேரூன்றி யிருந்ததையும் தம் சமயத் தொண்டில் குறைபாடுகளையும் நன்குணர்ந்த அவர்கள் பிற்காலத்தில் தமிழர்கள் கூட்டத்தில் நிலவிய