பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலமும் கவிஞர்களும்

7


மக்கட் சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மன நிலையை உண்டாக்குகின்றான்; இத்திறன் மக்கட் சமுதாயத்தில் நிலவும் கருத்துக்களை ஒழுங்குபடுத்தத் துணைபுரிகின்றது; வலிவற்றுக் கிடக்கும் ஒருசில கருத்துக்களை வலிவுறச் செய்கின்றது. மக்கட் சமுதாயத்தில் நிலவும் கருத்துக்கள் ஒழுங்கு பெற்று இலக்கிய ஆசிரியன் படைக்கும் நூல் வாயிலாக வெளிப்படுங்கால் அவை ஒரு புதிய வீறுடன் மீண்டும் மக்கட் சமுதாயத்தை அடைகின்றன; சமுதாய வாழ்வுடன் ஒன்றியும் விடுகின்றன. எனவே, சமுதாய வாழ்வே புத்துயிர் பெற்றுப் புதிய ஊட்டத்தை அடைகின்றது. இப்புதிய ஊட்டம் இன்னும் பல புதிய நூல்கள் தோன்றுவதற்கும் காரணமுமா கின்றது. தோத்திரப் பாக்கள் எழுந்த காலம், காவியங்கள் தோன்றிய காலம், சில்லரைப் பிரபந்தங்கள் இயற்றப் பெற்ற காலம் ஆகிய கால எல்லைகளை ஆராய்ந்தால் இவ்வுண்மை நன்கு புலனாகும்.

இனி, தற்கால இலக்கிய வரலாறும் இவ்வுண் மையை ஓரளவு தெள்ளிதின் விளக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமுதாய உணர்ச்சியும் நாட்டுப்பற்றும் விடுதலை வேட்கையும் இந்திய நாடெங்கும் பரவின; நாட்டு மக்களிடம் நல்லதொரு பக்குவம் நிலவியது. இக்காலத்தில்தான் மகாகவி பாரதி வாழ்ந்தான். அந்நியர் ஆட்சியால் மக்களிடையே இயல்பாக அரும்பியிருந்த நாட்டுப் பற்றைப் பேராற்றலுடன் பெருக்கெடுத்தோடச் செய்யக்கூடிய உணர்ச்சியூட்டும் பாடல்களைப் பாடிக் குவித்தான்.

“செந்தமிழ் நாடென்னும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே—எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே—ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே."

[1]


  1. பாரதி : செந்தமிழ் நாடு-1,