பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. கவிதையும் கற்பனையும்


கவிதைகளைக் கனிவித்துக் கற்போரின் மனத்தை விரிந்த பார்வையில் செலுத்துவது கற்பனைத்திறன் : கவிதையின் பிற பண்புகளுக்கெல்லாம் அடி நிலமாக அமைவது இதுதான்; முடியாக இருப்பதும் இதுவே. சாட்டை கொண்டு பம்பரம் விட்டு விளையாடும் சிறுவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ‘அலகிலா விளையாட்டுடை’ ஆண்டவன் அண்டங்களை ஆட்டி வைப்பதை இவ்விளையாட்டிற்கு ஒப்புமை காட்டுகின்றான் கவிஞன் ஒருவன்.

“சாட்டி நிற்கும் அண்டமெலாம்
சாட்டை இலாப் பம்பரம்போல்
ஆட்டுவிக்கும் குற்றாலத்து
அண்ணலார்”

என்று கூறுவதில் உள்ள கற்பனைத் திறனைக் காண்க. அண்டங்கள் சுழல்வதையும் பம்பரம் சுழல்வதையும் ஒப்பிட்ட முருகுணர்ச்சியை எண்ணி மகிழ்க. காலை இளம்பரிதியின் எழிலைக் காட்டும் மற்றொரு கவிஞன்,

தங்கம் உருக்கித்
தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர்
இங்கிதமோ ?

[1] என்று கூறுவதில் பொதிந்துள்ள கற்பனையாற்றலைச் சிந்தித்துக் களிக்க. இதைவிட வேறு எவ்வாறு கூற முடியும் ? எனவே, கற்பனையாற்றல் இலக்கியத்திற்குக்


  1. குற்றாலக் குறவஞ்சி- செய்யுள்-107. பாரதி : குயில்பாட்டு- இருளும் ஒளியும்-வரி 31-32.