பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதையும் கற்பனையும்

13


கின்றோம். ஆனால், அவை நம் மனத்தில் யாதொரு மாற்றத்தையும் உண்டாக்குவதில்லை. கவிஞன் மனத்தில் இக்காட்சிக்குரிய செயல்கள் ஒன்று சேர்ந்து அக்காட்சிகளை மயிர்க்கூச்செறிக்க வல்லனவாகவும் உயிர்ப்புள் ளனவாகவும் செய்துவிடுகின்றன. கவிஞனிடந்தான் - இத்தகைய பேராற்றலும் இயல்பாக அமைந்துகிடக்கின்றது. ஒருசில காட்சிகளை ஈண்டுக் காண்போம்.

ஒரு காட்சி : மேகங்கள் தவழும் மலைகளை நாமும் தான் காண்கின்றோம்.; அவை நம் மனத்தில் ஒன்றையும் தோன்றச் செய்வதில்லை. அப்படி ஏதவது தோன்றச் செய்தாலும் அக்கருத்து நிரந்தரமாக நிற்கும் ஆற்றலைப் பெறுவதில்லை. இராம இலக்குமணர்களும் சீதாப் பிராட்டியும் சித்திர கூடத்திற்குப் போனார்கள் என்ற செய்தியைத் தெரிவிக்க வந்த கம்பன் ‘மஞ்சுசூழ் சித்திர கூடமலை’ என்பதை, “குளிரும் வான்மதிக் குழவிதன் சூல்வயிற்றொளிப்பப் பிளிறு மேகத்தைப் பிடியெனப் பெரும்பனைத் தடக்கைக் களிறு நீட்டுமச் சித்திர கூடத்தைக் கண்டார்.”[1]என்று கூறுகின்றான். ஒளிவிடும் பிறைச்சந்திரன் கரு மேகத்தின் கருப்பத்தில் இருக்கின்றதாம் ; அது வெளிப்படுங்கால் மேகங்கள் இடிக்கின் றனவாம்; இவ்வோசையைக் கேட்ட ஆண்யானை தன் காதலியாகிய பெண் யானைதான் பிளிறுகின்றது என எண்ணி பனைபோன்ற தன் துதிக்கையை நீட்டுகின்றதாம். கவிஞனது இக்கற்பனை மலையின் தோற்றத்தை எவ்வளவு திட்டமாக நம் மனக் கண்முன் கொண்டு நிறுத்துகின்றது! இயற்கைக் காட்சியை அப்படியே கூறினாலும் கூறும் தன்மையில் நாம் காணும் புதுமெருகு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.


  1. கம்பராமாயணம்- அயோத்-வனம்புகு-47