பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

காலமும் கவிஞர்களும்


மனக்கண்ணால் கண்ணுறும்பொழுது பன்மடங்கு சிறந்து பொலிவுறும். மனம் அவ்வழகில் ஈடுபடும் போதுதான் நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகின்றது. மனத்தில் எழும் கற்பனையாற்றல் பொருள்களில் பொலிந்து நிற்கும் உணர்ச்சி பாவனைகளை மட்டிலும் தேர்ந்தெடுப்பதால், அவை நம் மனத்தில் நிலையாகப் பதிவு பெறுகின்றன.

மேலே கூறிய கருத்து விளக்கக் கற்பனை கலந்த கவிதைகள் தமிழ் இலக்கியப் பூங்காவில் எண்ணற்றவை உள்ளன.ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டுக் காண்போம்.

இராமகாதையில் ஒரு கட்டம் : இரு வேறுபட்ட மனங்கள் போராடுகின்றன. இராமனுக்கு முடிசூட்ட எண்ணுகின்றான் தசரதன் ; அந்த எண்ணத்தைச் சிதைத்துத் தன் மகன் பரதன் பாராளவேண்டும் என்று! வாதாடுகின்றாள் கைகேயி. நாம் என்ன நேரிடுமோ என ஏங்கி முடிவை எதிர்பார்த்து நிற்கின்றோம். நம் ஆவலை முற்றுவிக்கக் கவிஞன் பொழுதுவிடிவதைப் புலப்படுத்து கின்றான். இரவு கழிந்ததை அவன்,

"சேணு லாவிய நாளெலாம் உயிர்
ஒன்று போல்வன செய்து பின்
ஏணு லாவிய தோளினாள் இடர்
எய்த ஒன்றும் இரங்கிலா
வாணிலா நகை மாதராள் செயல்
கண்டு மைந்தர்முன் நிற்கவும்
நாணி னாளென ஏகினாள் நளிர்
கங்கு லாகிய நங்கையே

[1] என்று கூறுகின்றான். இதில் உள்ள கற்பனையில் கவிஞனின் குரல் நம் இதயத்தைத் தொடுகின்றது. தசரத


  1. 19 அயோத் - கைகேயி சூழ்வினை-46