பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காலமும் கவிஞர்களும்




தளிர்போல் மடவார் தணந்தார்தம்
தடந்தோள் வளையும் மாமையும்
விளியாக் கொண்(டு) இங்(கு) இளவேனில்
விருந்தா ஆடல் தொடங்கினன்’’. *

(இளி-ஒருபண்; பிரசம்-வண்டு; தும்பி-ஒருவகை வண்டு; களிவாய்-களிக்கின்ற வாயினையுடைய, முழவு-மத்தளம்; பொழில்கள் - சோலைகள்; அரங்கு - நாடக மேடை ; தணந்தார்-பிரிந்தார் ; தடந்தோள் வளையும் மாமையும்-வளை கழன்றபடியையும் மாமைநிறம் கெட்ட படியையும் தத்தம் கணவர் உணர்வதற்குத் தூது சென்ற பாணன் யாழ்மேல் வைத்துப் பாடும் பாட்டை; விளியா - பாட்டாக, விருந்தா-புதிதாக; ஆடல்-நடனம்.)

இக் காட்சிகளையெல்லாம் கண்டுகளித்த கம்பன் இக் கண்கொண்டே தனது காவியத்திலும் இத்தகைய நாட்டியம் ஒன்றை நமக்குக் காட்டுகின்றான். காலத்திற்கேற்றாற்போல் கருத்துக்களும் பாடலும் மாறுவது ஆராய்ந்து மகிழ்வதற்குரியது.

கம்பன் காட்டும் காட்சி : சேலைகளைப் பிடித்துக் கொண்டு விரித்தாடும் நடனமாதர்களைப் போலவே, மயில்கள் தோகைகளை விரித்தாடுகின்றன. விளக்குகளைத் தாங்கி நிற்கும் மகளிர்களைப் போலவே தாமரைக் கொடிகள் கூம்பிய மலர்களைத் தாங்கி நிற்கின்றன. முழவினை இயக்குவோர் முழவினின்று ஒலிகளைக் கிளப்புவது போலவே, மேகங்கள் இடி முழக்கம்செய்து நிற்கின்றன. கூத்துப் பார்ப்பவராகக் குவளைக்கொடிகள் உள்ளன. அக்குவளைக் கொடிகளாகிய பார்வையாளர்கள் மலர்களாகிய கண்களால் பார்க்கின்றனர். யாழ்ப்பாணர்கள் இனிய ஒலியை உண்டாக்கி மனத்தைக் களிப்பிப்பது போலவே வண்டுகள் இன்னோசையால் ரீங்காரம் செய்து நிற்கின்றன. இக் காட்சிகளையெல்லாம் கண்டுகளித்துக் கொலுவீற்றிருக்கின்றது மருதத்திணை அரசு.


  • சிந்தாமணி-2691