பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. பாரதியின் பாஞ்சாலி சபதம்


ஒரு மொழியின் வளத்தை அம்மொழியிலுள்ள காப்பியங்களே புலப்படுத்தும். பண்டைக் காலந் தொட்டு வளமலிந்த நம் தமிழ் மொழியில் அளவிறந்த காப்பியங்கள் உண்டாயின. காப்பியங்களை இலக்கண நூல்கள் “பொருள் தொடர் நிலைச் செய்யுட்கள்” என்று குறிப்பிடும். தமிழர்களின் தலைசிறந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் தோல், விருந்து போன்ற பெயர்களாற் குறிப்பிடப்பெறும் காப்பியங்கள் இன்று வழக்காற்றில் இல்லை. அவை உரையாசிரியர்களின் காலத்தே வழக்கு வீழ்ந்தமையின் அவர்கள் அவற்றைக் கூறாமல் இலக்கணத்தை விளக்குவதற்குத் தத்தம் காலத்து வழங்கிய நூல்களை மேற்கோள் காட்டிச் சென்றனர். நம்மிடையே இன்று பயின்று வரும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், கலிங்கத்துப்பரணி, பல்வேறு தலபுராணங்கள் போன்ற காப்பியங்களையும், பிறசமய அறிஞர்கள் அண்மையில் இயற்றிய தேம்பாவணி, இரட்சண்ய யாத்திரிகம், சீறாப்புராணம் போன்றவைகளையும் வரலாற்று வரிசையில் வைத்து எண்ணிப் பார்த்தால் அவற்றினிடையே உள்ள பொதுத்தன்மை எளிதில் புலனாகும். கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் தோன்றிய காப்பியங்களில் பெரும்பாலும் அகவல் நடை (Blank Verse) கையாளப் பெற்றிருப்பதையும் அதற்குப் பிறகு தோன்றிய காப்பியங்களில் பாவினங்கள் பயின்று வருவதையும் காணலாம். சிந்தாமணிதான் விருத்தயாப்பில் தோன்றிய முதற் காப்பியம். அதை யொட்டியே கம்பராமா