பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

காலமும் கவிஞர்களும்



யணம், பெரியபுராணம் போன்ற காப்பியங்கள் விருத்த யாப்பில் எழுந்தன. காப்பிய நடையில் எழுந்த தலபுராணங்களில் ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் வெறும் செய்யுட் குவியல்களாகக் காட்சியளிக்கின்றன வேயன்றி, அவற்றில் கவிதை நயமும் இல்லை : காப்பியச் சுவையும் இல்லை. கிறித்தவக் கவிஞர்களும், முகம்மதியப் புலவர்களும் இயற்றியுள்ள காப்பியங்களில் ஒரளவு இவை நன்கு அமைந்துள்ளன. இவர்கள் யாவரும் பழைய முறையினையே கையாண்டிருக்கின்றனர். சிந்தாமணிக்குப் பிறகு எழுந்த காப்பியங்கள் யாவும் அதையே முன்மாதிரியாகக் கொண்டு யாக்கப்பட்டன என்று கூறலாம். கலிங்க நாட்டுப் படையெடுப்பைப் பொருளாகக் கொண்டு தாழிசையில் எழுதப்பெற்ற முதற் காப்பியமான "கலிங்கத்துப் பரணியை முன்மாதிரியாகக் கொண்டு பின்னர் எழுந்த பரணி நூல்கள் யாவும் அதனைப்போல் சிறப்பாக அமையவில்லை.

மேனாட்டார் பெருங்காப்பியங்களை இரண்டு வகையாக பிரித்துள்ளனர். முதல் வகையைத் தேசீய காப்பியங்கள் (National or authentic Epics) என்று குறிப்பிடுவர். பெரும்பாலும் இவை கவிஞனின் நாட்டைச் சார்ந்த ஒரு வீரனின் வீரச்செயல்களையும் வெற்றிச் சிறப்புக்களையும் பற்றியே கூறிச் செல்லும். எண்ணற்ற கட்டுக்கதைகள் (Legends) அவ்வீரர்களைச் சுற்றி இயங்கும். கவிஞன் அவற்றிற்குத் தன் காவியத்தில் அழியாத் தன்மையை அளித்து அவற்றினைப் பாதுகாக்கின்றான். இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களாக இலியட்(Iliad), நிபுலன் ஜென்லைட்(Nibulengeniled); பியோ வொல்ஃப் (Beowulf) என்பவற்றைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகையை இலக்கியக் காப்பியங்கள் (Literary or artificial-Epics) என்று வழங்