பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் பாஞ்சாலி சபதம்

39


குவர். பெருங்காப்பியங்களுக்குரிய பண்புகள் யாவும் கொண்டிலங்கினும் கவிஞன் தன் நாட்டைப்பற்றியோ தன் நாட்டைச் சார்ந்த வீரனொருவனைப் பற்றியோ சிறப்பிக்க வேண்டுமென்ற கவலை கொள்ளுவதில்லை. ஏதாவது ஒரு புராணக் கதையிலுள்ள (Mythology) வீரனைக் காப்பியத் தலைவனாகக்கொண்டு காவியத்தைப் படைக்கலாம். மில்டனின் சுவர்க்க நீக்கத்தை (Paradise Lost) இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். நம் நாட்டுக் காவியங்களாகிய சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் போன்றவைகள் மேனாட்டு முதல்வகைக் காவியங்களுள் அடங்குமாயினும் அவற்றிற்குத் தனிச் சிறப்புக்கள் உள. இவை வெறும் நாட்டினையோ வீரனையோ சிறப்பிக்காது, மன்பதைக்கு என்றும் அழியாத உண்மைகளை வழங்கிவரும் இலக்கியக் கருவூலங்கள் என்று சொல்லலாம். மன்பதைக்கு என்றுமே ஒரு கலங்கரை விளக்கம் போன்ற ஒன்றினைப் படைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் கனவு கண்ட மில்டனைப்போலவே, இளங்கோவும் கம்பனும் சாவா இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

பாரதி இயற்றிய 'பாஞ்சாலி சபதம்’ இருபதாவது நூற்றாண்டில் உருவான ஒரு தமிழ்க் காப்பியம். தருமன் இந்திரப்பிரத்தத்தில் இராசசூய வேள்வி செய்து முடித்த பிறகு துரியோதனன் முதலிய கெளரவர்கள் அத்தீனாபுரத்தில் மண்டபம் ஒன்று சமைத்துப் பாண்டவர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களை வரவழைத்து, வஞ்சகமாகச் சூதுக் கிழுத்து, அவர்களை அவமானப்படுத்திய கதைப் பகுதியைக் காப்பியப் பொருளாகக்கொண்டு ஆக்கப் பெற்றது. பழைய கதையைக் கையாண்டு அதற்குப் புது உருவமும் புதிய உயிரும் கொடுத்துக் காப்பியப் படைப்பு செய்வது கவிஞனின் தனிச் சிறப்பாகும். பழைய கதையைப் புதிய காப்பியமாக