பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் பாஞ்சாலி சபதம்

41




தன்நிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றம் என்(று) இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தல் என்(று)
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவு இக(ல்) வென்றி
சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பிக்
கற்றோர் புனையற் பெற்றிய தென்ப” 1

என்று கூறுகிறது. மற்றும்,

“கூறிய உறுப்பில் சிலகுறைந்து இயலினும்
வேறுபா(டு) இன்(று)என விளம்பினர் புலவர்” 2

என்ற ஒரு புறனடையும் தந்து, காப்பியங்களின் யாப்பைக் (Form) குறித்து

“ஒரு திறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாட்டையும் விரவியும் வருமே" 3

என்றும் கூறுகின்றது. உரை நடையும் பாநடையும் விரவி வரும் காப்பியத்தைத் தொல்காப்பியம் ‘தொன்மை’ என்ற பெயரால் குறிப்பிடும். வடநூலார் இதனைச் சம்பு’ என்று குறிப்பிடுவர்.

மேனாட்டு இலக்கிய வரலாற்றைப் பார்த்தால் அங்கும் இந்தப் பெருங்காப்பிய நடை காலத்துக் கேற்றவாறு மாற்றம் அடைந்து வந்துள்ளது. மேனாட்டு ஆசிரியர்கள் அனைவருமே ஹோமரையும் வர்ஜிலையும் தமக்கு முன் மாதிரியாகக்கொண்டு காப்பியங்களை இயற்றியுள்ளனர். ஆங்கில மகா கவிஞரான மில்டன்


1 - தண்டிய - சூ.8, 2-தண்டிய - சூ.9, 3-தண்டிய - சூ.11