பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் பாஞ்சாலி சபதம்

43




அதன்மீது நம்பிக்கையை உண்டுபண்ணக் கூடியதாக இருத்தல் வேண்டும். இவ்விடத்தில் கதையின் உண்மைப் பொருள் என்ன என்பதைப் பரந்த பார்வையால் காணவேண்டும். அஃதாவது, கதை பொது மக்கள் நன்றாக அறிந்து அவற்றில் தோய்ந்ததாக இருத்தல் வேண்டும். மானிட வாழ்க்கையின் உண்மைகள் அடங்கிய ஒரு கட்டுக் கதை காப்பியத்திற்குச் சிறந்ததாக அமையலாம். ஜூலியஸ் சீஸர் என்ற பெயரை எண்ணும்பொழுதே மக்கள் மனத்தில் எழும் கருத்துக்கள் யாவும் மக்களுக்கு மிகமிக முக்கியமானவையே. அதுபோலவே, சாத்தானைக் கருதும் பொழுது மனத்தில் எழும் கருத்துக்களும் முக்கியமானவையே. இம்முறையில் சாத்தான் சீஸரைப்போலவே உண்மையான பாத்திரந்தான். ஆகவே, மானிடவாழ்வின் அநுபவ சம்பந்தப்பட்ட ஒரு கதையைக் கற்பனே செய்வது ஒரு கவிஞனால் சாத்தியப்படக் கூடியதே. அவன் கொள்ள வேண்டியதெல்லாம் மனித அநுபவமே; ஒவ்வொருவரும் அறிந்து, விவாதிக்க முடியாததும் யாவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதுமான வாழ்க்கை அநுபவமே.”* இந்த முறையில் பார்த்தால் பாரதி எல்லோருக்கும் தெரிந்த ஒரு இதிகாசக் கதையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளான். இக்கதையின்மூலம் மக்களுக்கு உணர்த்த வேண்டிய உண்மைப் பொருள் அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது தான். தொடக்கத்தில் தீயவர்கள் வெற்றியடைவது போல் காணப்படினும் இறுதியில் நல்லவர்கள்தாம் கட்டாயம் அறத்தின் பயனை அநுபவிப்பர் என்பது பாரதி காட்ட வந்த உண்மை. காவியத்தில் இதனை அர்ச்சுனன் வாய்மொழியாக,


* Lascelles Abercrombie: The Epic பக்கம் 55–56