பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

காலமும் கவிஞர்களும்


 தத்துவம் மிளர்கின்றது. துரியோதனன் தீய குணங்களையுடையவன் என்பது நாம் அறிந்ததே. என்றாலும், பாரதி அவனை ஒரு வெறும் அயோக்கியனா மட்டிலும் காட்டவில்லை. பாரதியின் துரியோதனன் ஒரு சிறந்த இலட்சியவாதிபோல் காட்சியளிக்கின்றான். தனது தீச் செயல்களும் பாண்டவர்கள்பால் தான் கொண் டுள்ள பொறாமைக்கும் ஒர் அரசியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே செயலாற்றுகின்றான். அந்த இலட்சியத்தை நிறைவேற்ற சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமன் சகுனி துணை செய்கின்றான். திருதராட்டிரன் துரியோதனனுக்குப் பல விதமாகப் புத்திமதிகள் கூறுகின்றான். அவற்றைச் செவிமடுத்த அரவக் கொடியோன் பாம்புபோல் சீறிப் பதில் கூறும்பொழுது,

“மன்னர்க்கு நீதி ஒருவகை-பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை!”

* * *

“குழைதல் என்பது மன்னவர்க் கில்லை :
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும் ;
பிழை யொன்றே யரசர்க் குண்டு, கண்டாய் :
பிறரைத் தாழ்த்து வதிற்சலிப் பெய்தல்.
வெல்வதெங் குலத்தொழிலாம் ;-எந்த
விதத்தினி லிசையினுந் தவறில்லை காண் !
நல்வழி தீயவழி-என
நாமதிற் சோதனை செயத் தகுமோ? ”

என்று தன்கொள்கைத் துளிகளைச் சிதறவிடுகின்றான். இக்காலத்தில் மெக்கியவல்லி, ஹிட்லர் போன்ற அரசியல்வாதிகளை நன்கு அறிந்த நமக்கு ‘இவர்களும் துரியோதனனுக்கு எம்மாத்திரம்?’ என்று எண் ணும்படி தோன்றுகின்றது. துரியோதனுடன் 'ஒத்து