பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

இந்நூலை அழகுற அட்சிட்டுக் கற்போர் கரங்களில் கவின் பெறச் செய்த எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகத் தார்க்கு என் மனமுவந்த நன்றி உரித்தாகும், யான் கல்லூரி தொடங்கப்பெற்றதிலிருந்து எட்டாண்டு களாக இக்கல்லூரியில் பணியாற்றி யிருந்தாலும், கடந்த மூன்றாண்டுகளாகத்தான் திரு. C.V.CT.V. வேங்கடாசலம் செட்டியார் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. வள்ளல் அழகப்பர் அவர்கள் நோய்வாய்பட்ட திலிருந்தே வள்ளல் நிறுவிய கலைக்கூடங்களை யெல்லாம் கருத்துடன் கண்காணித்து வருகின்றார்; தம்முடைய முழு - நேரத்தையும் கலைக் கூடங்களின் வளர்ச்சிக்கான முயற்சி களிலேயே செலவிடுகின்றார். இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவியையும் இந்தியன் பாங்கி இயக்குநர் பதவியையும் பல ஆண்டுகள் வகிந்துவந்த திரு. செட்டியார் அவர்கள் அவற்றில் பெற்ற நிருவாகத் திறமை முழுவதையும் வள்ளல் தோற்றுவித்த கலைக்கூடங்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்துள்ளது அவரது பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கூர்த்த மதியும் நிதானமான இயல்பும் நியாயத்துடன் அன்பையும் தயையையும் ஒன்று சேர்க்கும் தன்மையும் திரு. வேங்கடாசலம் செட்டியார் அவர்களின் ஆட்சி முறையை என்றென்றும் நினைவிற் கொள்ளுமாறு செய்துள்ளன. இவ்வாறு பல்லாற்றானும் சிறந்துள்ளவரும் என்பால் அன்பு கொண்டுள்ளவருமான திரு. செட்டியார் அவர்கட்கு இந்நூலைச் 'அன்புப்படையலா’க்குகின்றேன்.

இளைஞர் உலகம் இந்நூலிலுள்ள கருத்துக்களால் பயன் அடைவதாயின், அதுவே யான் பெற்ற பேறு. எந்தப் பிரச்சினையையும் காய்தல் உவத்தலின்றி அறிவியல் முறையில் அணுகவேண்டும் என்பது என் அவா. அதற்கு இந்நூல் சிறிதளவாவது துணைபுரியக்கூடும் என்பது எனது திடமான நம்பிக்கை.

அழகப்பா பயிற்சிக் கல்லூரி- இங்ஙனம்
ந. சுப்பு ரெட்டியார்
காரைக்குடி
24-1-58