பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 நன்கு ஆதரிக்கப்பட்டனர். அதனால் கலையும், சமயமும், சிற்பமும் பெருகியது. புலவர்கள் பலர் ஆதரிக்கப்பட்டனர். இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. கல்வி அறிவு பெருகியது. விவசாயத் துடன் பல துணைத் தொழில்கள் பெருகியது. விவசாயத் தொழிலாளர்கள் பலர் வளமுற வாழ்ந்தனர். மக்கள் வளத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்ததால் பல சமயத்தாரும், பல சாதியினரும் சமய, சாதிப் பூசல் இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். இதனை இப்பகுதி வரலாறு சிறப்புடன் கூறுகிறது. சைவ வைணவக் கோயில்கள் ஒரே தன்மையில் ஏற்றத் தாழ்வின்றி ஆதரிக்கப்பட்டன. பல கல்வெட்டுக்கள் சிவமயம் என்று தொடங்கி ராமஜெயம் என முடிவுற்றது. வேட்டுவர் வேளாளர் ஆகியோர் ஊர்ச்சபைகளில் ஒன்றாக இயங்கிக் கோயில்கட்கும் ஒற்றுமையுடன் கொடைகள் அளித்தனர். கொங்கு வேளாளர் காணித் தெய்வங்கள் பல திருப்பணிகள் செய்யப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றன. 10-11-1800 இல் கொடுமுடிக்குப் பகுதி வருகை புரிந்த புக்கானன் ' இந்தியாவிலேயே நான் பார்த்த இடங்களில் இப்பகுதி மிகவும் அழகு வாய்ந்தது' என்று பாராட்டும் அளவுக்கு இப்பகுதியை வளமாக மாற்றியது காலிங்கராயன் கால்வாயே ஆகும். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளப்படுத்தி ஆயிரக் கணக்கான மக்களை வளத்துடன் வாழச் செய்யும் புனிதன் புகழோன் காலிங்கராயன் கட்டிய அணையும் வெட்டிய கால்வாயும் என்றும் வளம் பெருக்கி அன்னைபோல் அணைத்தூட்டி வாழவைப்பதாகுக! வாழ்க காலிங்கராயன் புகழ்!