பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புலவர் பாடிய புகழ் “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்" என்னும் வள்ளுவர் வாய்மொழி உயிருக்கு ஊதியமாகப் புகழ்ப் பேற்றைச் சிறப்புறக் கூறுகிறது. சங்க காலத்தில் வாழ்ந்த பாரியைப் போன்ற வள்ளல்கள் இன்றும் சாகா வரம் பெற்றுப் புகழுடன் விளங்குகின்றனர். பாவலர்கள் அவர்களைத் தம் படையல்கள் மூலம் என்றும் வாழும் சிறப்பினராகச் செய்துள்ளனர்; இறவா வரம் ஈந்துள்ளனர். அவ்வள்ளல் பெருமக்களும் புலவர்களால் தாம் பாடப் படுவதைப் பெருமதிப்பாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். காலிங்கராயன் வாழ்ந்த காலத்தில் புலவர்கள் பலர் அவர் செய்த அரும் பெரும் செயலைப் பாடிப் புகழ்ந்திருக்க வேண்டும். அப்பாடல்களில் இப்பொழுது ஒன்றும் கிடைக்க வில்லை. ஆனால் காலிங்கராயன் காலத்திற்குப் பின்னர் அவர் செய்த பணிகளால் நாடு பல நற்பயன்கள் பெறுவதைக் கண்டு புலவர்கள் பலர் காலிங்கராயன் செயலைப் பாராட்டிப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கொங்கு மண்டல சதகம், சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ், ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு, திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை, பூந்துறைப் புராணம் நல்லணவேள் காதல் முதலிய இலக்கியங்களும், பல தனிப் பாடல்களும் காலிங்கராயனின் அழியாப்புகழை அழகுற முரசறைந்து முழக்கிக் கொண்டிருக்கின்றன. கொங்கு மண்டல சதகம் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த புலவர்கள் அவரவர்கள் வாழ்ந்த பகுதிகளின் இயற்கையமைப்பு, வரலாற்றுச் சிறப்பு, சமயச் சிறப்பு, தமிழ் வளர்ச்சி, அரசர் கள், கொடைவள்ளல்கள், பெருமக்களின் வாழ்வியல்