பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 94

இதைவிடச் சிறிய மற்றோர் அரண்மனையைத் திருநெல்வேலியிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டினார். இதன் அமைப்பும் சிறப்புமிக்க கட்டடவேலைகள் நிரம்பியது. இந்த அரண்மனையில் அவர் இடையிடையே தங்குவதற்கு விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. மதுரை அரண்மனையின் எஞ்சிய பாகங்கள் இப்போது நீதிமன்றங்களுக்கும் மற்ற பொதுநலக் காரியாலாயங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. திருமலை நாயக்கர் ஆட்சியின் பெரும்பகுதி அரசியல் தன்மையற்ற முறையற்ற சண்டைகளினால் களங்கமடைந்தது. நாயக்க மரபில் குறிப்பிடத்தக்க புகழ்வாய்ந்த அடுத்த அரசி அரசுப் பிரதிநிதி இராணி மங்கம்மாள். இவள் 1689 முதல் 1704 வரை ஆட்சி புரிந்தாள். இவளுடைய பேரன் குழந்தையாய் இருந்தமையால், அவனை அரசப் பிரதிநிதியாய் நிலைபெறச் செய்தாள். திருநெல்வேலியிலிருந்து மதுரையிலும் அதற்கடுத்த மாவட்டங்களிலும் இவள் புகழ் பரவியது. இவள் நாடெங்கும் சாலைகளை அமைத்தாள். சாலையின் இருமருங்கிலும் நிழல் தரும் மரங்களை நடச் செய்தாள். கிணறுகளை வெட்டுவித்தாள்; சத்திரங்கள் கட்டுவித்தாள்; மதுரை அரச மரபினர் என்றும் செய்தறியாத பல நலன்களை மக்களுக்காகச் செய்தாள். அதனால், இவளது பெயர் இன்னும் மங்காது புகழ்பெற்றுள்ளது. நாடெங்குமுள்ள இவள் கட்டுவித்த மரச்சாலைகளுக்கு இவளுடைய பெயரே வழங்கலாயிற்று. சான்றாகக் குற்றாலத்திற்கருகேயுள்ள மரச்சாலைகள் மங்கம்மாளின் பெயர் பெற்றுள்ளன என்பதை நான் அறிந்தேன். இவ்வளவு நன்மைகளும் செய்தமையால் இவளே எல்லாவற்றையும் செய்தாள் என்று கருதப்படுகிறது.

நாயக்கர்களின் விருதுகள்

நாயக்க அரசர்கள் தங்களை மதுரை அரசர்கள் என்று ஒருபோதும் வழங்கிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. அவர்கள் 'மகாராயலு, விஜயநகர அரசர்களின் சேனாபதிகள் என்பதைத் தவிர, வேறு எதையும் விரும்பவில்லை. அவர்கள் விஜயநகர அரசனுக்குக் கப்பம் கட்ட மறுத்த போதும், அவனுக்கு எதிராகப் போர் தொடுத்த போதும் கூட இதைவிடச் சிறந்த ஒரு விருதைத் தாங்கள் அடைய விரும்பவே இல்லை. அவர்கள் எல்லா மாநிலங்களையும் கைப்பற்றி அரசனுக்குரிய எல்லா வலிமையும் அடைந்துங்கூட ஏதோ ஆண்டவனிடம் பணிவன்பு காட்டும் பரம்பரைப் பண்பு காரணமாக, அவர்கள் அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. இக்காலத்தில் பாண்டிய வழியின் கடைசி அரசர்கள் உரிமைப்படி மதுரை நாட்டில்