பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 102

ஆனால் இந்த அணைக்கட்டின் தோற்றத்திற்கும் இந்த அரியநாயகருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால் அணைக்கட்டின் அருகிலுள்ள கிராமத்தின் பெயரால் இதற்கும் அப்பெயர் ஏற்பட்டது.

5. ஐந்தாவது அணைக்கட்டு, சுத்தமல்லி என்பது. திருநெல்வேலி நகரத்திற்கும் சுற்றுப்புறங்களுக்கும், ஆங்கு நடைபெறும் உழவுத் தொழிலுக்கும் தேவையான தண்ணீரை இந்தச் சிறந்த அணைக்கட்டே வழங்குகிறது.

6. பழவூரிலுள்ள அணைக்கட்டு ஆறாவதாகும். இது பாளையங்கோட்டைக்கும் அதற்கருகிலுள்ள இடங்களுக்கும் தண்ணீர் வசதி அளிக்கிறது. பாளையங்கோட்டையிலிருந்து வரும் கால்வாய், பாளையம் கால்வாய் என்று வழங்கப்படுகிறது. பழைய பாளையங்கோட்டையின் கோட்டையும் இவ்வாய்காலும் கன்னடிய பாளையக்காரன் ஒருவன் பெயராலேதான் இப்பெயர் பெற்றன. பின்னே கூறப்பட்ட கன்னடியன் முந்தியவனுடைய வழிவந்தவன். பழவூர் என்பது ஆற்றின் இடக்கரையிலே அமைந்திருக்கிறது. ஆனால், இப்பெயர் பெற்ற கால்வாய் அதிலிருந்து வலக்கரைப் பக்கம் ஓடுகிறது.

7. தாமிரபரணியிலுள்ள எல்லா அணைக்கட்டுகளிலும் அதிகப்படியான நெல் விளைச்சலுக்குத் தேவையான தண்ணீரைக் கொடுப்பது மருதூர் அணைக்கட்டேயாகும். இது பாளையங்கோட்டைக்குக் கிழக்கே சில மைல் துரத்திலிருக்கிறது.இந்த அணைக்கட்டு 1792இல் எறக்குறைய முற்றும் திரும்பக் கட்டப்பட்டது. கல்வெட்டொன்றில் கூறப்பட்டபடி இது டோரின் என்பவர் கலெக்டராய் இருந்த காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. கர்னல் கால்டுவெல்லினால் 1807 இல் மறுபடியும் அவ்வணைக்கட்டில் அதிகமான திருத்தங்கள் செய்யப்பட்டன.

8. இறுதியாகப் புதுக்குடிக்கும் திருவைகுண்டத்திற்கும் இடையே கடலுக்கு மிகவும் அருகில் உள்ளது எட்டாவது அணைக்கட்டாகும். லெப்டினண்ட் ஷெப்பர்டு என்பவரால் சில ஆண்டுகட்கு முன்புதான் இவ்வணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த இடத்தில் ஆற்றின் அகலம் 800 கஜம். அணைக்கட்டின் மதிப்பு, பதினோறாயிரங்கள் (அந்நாளில்!). தாமிரபரணியிலுள்ள இந்த ஓர் அணைக்கட்டுதான் முற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் கட்டப்பட்டது என்றாலும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் நாடு வந்தபொழுது எல்லா அணைக்கட்டுகளுமே திருத்திக் கட்டப்பட்டன.