பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103 கால்டுவெல்


திருநெல்வேலிக் கரையில் போர்ச்சுகீசியர்

1498 ஆம் ஆண்டு, மேத் திங்கள், 20 ஆம் நாள் போர்ச்சுகீசியர் கள்ளிக்கோட்டையில் வந்து இறங்கினர். முதல் ஐரோப்பிய மாலுமியாகிய வாஸ்கோடகாமா என்பவர் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு இந்தியாவிற்கு வந்தார். அவர் தலைமையில் வந்த மூன்று மரக்கலங்களில் போர்ச்சுகீசியர் வந்தனர். வாஸ்கோடகாமா அடுத்த ஆண்டே ஐரோப்பாவிற்குத் திரும்பிவிட்டார். அங்கு அவர்தம் பயணத்தின் போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் தாம் கண்ட அதிசயங்களைப் பற்றியும் ஒரு குறிப்புத் தயாரித்துத் தம் அரசனுக்கு அளித்தார். அதில் அவர் திருநெல்வேலிக் கரையிலுள்ள காயல் என்னும் ஓர் இடத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு முத்து அகப்படுவதாகவும் அது மகம்மதிய அரசருக்கு உரிமைப்பட்டிருப்பதாகவும் தாம் கேள்விப்பட்டதாக அதில் கூறுகிறார். அதற்குப் பிறகு சில காலங்கழித்துக் கொல்லம் அரசன் காயலில் வசித்ததை நாம் கண்டோம். அது உண்மையாக இருக்க வேண்டும்; ஏனெனில், வாஸ்கோடகாமா காலத்தில் அந்த இடத்தை ஆண்டு வந்தவன் மகம்மதியன். பரவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு மகம்மதியர்களைக் கேட்டுக் கொண்டமையால் மகம்மதியன் அரசனாக வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. மற்ற ஆதாரங்களிலிருந்து அக்காலத்தில் கடற்கரையோரமாக மகமதியர் அதிகமாகவும் வலிமையுடையவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. செவிவழியாகவும் காயலின் கடைசி அரசன் மகம்மதியன் என்றே நான் கேள்விப்பட்டேன்.

இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் முதற்குடியேற்ற நாடு கொச்சி. அங்கு அவர்கள் 1502 இல் ஓர் ஆலையைக் கட்டினார்கள்; அடுத்த ஆண்டில் அங்கு ஒரு கோட்டையையும் கட்டினார்கள். அக்காலம் முதற்கொண்டு அவர்கள் முழு இந்தியக் கடற்கரைக்கும் நடைமுறையில் எசமானர்களாகி விட்டார்கள். விரைவிலேயே அவர்கள் எல்லா மூரிஷ் மரக்கலங்களிலும் அதாவது, எல்லா மகமதிய மரக்கலங்களிலும், எது போர்ச்சுகீசிய அனுமதிச் சீட்டைப் பெற மறுத்ததோ, அதைத் துரத்தியடித்தார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு போர்ச்சுகீசியத் தலைவனாகிய பார்பொஸா என்பவன் கிழக்கே பல இடங்களுக்குப் பயணம் செய்தான். 1571 இல் காயல் கொல்லம் அரசனுக்குச் சொந்தமாயிருந்ததென்றும், அவ்வரசன் பொதுவாக அங்கேயே தங்கியிருந்தான் என்றும் கூறியிருக்கிறான். கொல்லம் அரசராயிருந்தவர் பிற்காலத்தில் இப்போது கூறப்படும் திருவாங்கூர் அரசர் எனப் பெயர் சூட்டிக் கொண்டார் என்பதை நாம் அறிய