பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 106

இருந்ததென்பதும் தோன்றுகின்றன.

படகர்களின் எதிர்பாராத படையெடுப்பு

மூர்களை வெற்றி கண்ட நாளாகிய 1532க்கும் சேவியர் கடற்கரையில் வசித்த முதல் ஆண்டாகிய 1542க்கும் இடையே புதிய எதிரிகள் தோன்றினார்கள். மகமதியரைவிட அவர்கள மிக்க பலம் வாய்ந்தவர்கள். போர்ச்சுகீசியர்களுக்கே அவர்களை அடக்குவது கடினமாய் இருந்தது. அவர்களுக்குப் படகர்கள் என்பது பெயர். அவர்கள் அடிக்கடி சூறையாடிய பிறகு ஏற்பட்ட நிலையைப் பற்றி மிதப் பரிதாபமாகவும் இரக்கமாகவும் சேவியர் தம் கடிதங்களில் எழுதியிருக்கிறார். சேவியர் அவர்களை அடக்கமறற கொள்ளைக்காரர்கள் என்று குறிப்பிடுகிறார். மற்றோர் ஆசிரியர் அவர்கள் வரி வசூலிப்பவர்கள் என்று எழுதுகிறார். அதைப்பற்றி நாம் பின்பு கவனிப்போம். ஏனெனில், வரி வசூலித்தல், கொள்ளையடித்தல் என்ற இரண்டு குணங்களையுமுடையவர்கள் தென்னிந்தியாவில் கர்நாடக அரசர்களிடமிருந்து கிழக்கு இந்தியக் கம்பெனியாரிடம் ஆட்சி வரும் வரை மிகச் சாதாரணமாகத் தொடர்ந்து இருந்துவந்தார்கள். குமரி முனைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் படகர்களின் கொள்ளையினால் ஏற்பட்ட பயங்கர நாசங்களைச் சேவியரே நேரில் கண்டார். அதனால், போர்ச்சுகீசியக் குடியேற்ற நாடுகள் கூட ஒரு வேளை தாக்கப்படலாமென்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்தப் படகர்கள் யார்? படகர்கள் என்ற பெயர் வடுகர்களை அதாவது நாயக்கர்களைக் குறிக்கிறது என்பதை முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். கன்னடத்தில் அவர்கள் பெயர் படகர் என்பது. இதன் சாதாரணப் பொருள் ‘வடநாட்டவன்’ என்பது, தெலுங்கு நாயக்கர்கள் வடக்கிலிருந்து வந்தமையால், அவர்களைத் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் வடநாட்டவர் என்று வழங்கினார்கள். நாயக்கர்கள் பிரிவில் வடுகர்கள் என வழங்கப்பட்டவர்கள் திருமலை நாயக்கரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது சாதிப் பட்டப்பெயர் ‘நாயக்கர்’ அல்லது ‘நாயுடு’ என்பது. மற்ற நாயக்கர்களிலிருந்து தங்களைக் பிரித்துக் காட்டவும் பொதுவாகவும் அவர்கள் ‘வடுகர்கள்’ எனப்பட்டார்கள். அக்காலத்துக்கிறிஸ்தவ எழுத்தாளர் ஒருவர், படகர்கள் அரசனுடைய வரிவசூல் செய்யும் தண்டற்காரர்கள் என்றும், கொடுமையும் இறுமாப்பும் நிறைந்த கூட்டத்தினர் என்றும், அவர்கள் பொதுவாக நாயர்கள் என்று வழங்கப்பட்டார்கள் என்றும் விளக்கியுள்ளார். இங்கு மேற்குக் கடற்கரையில் வசித்துவந்த இந்த எழுத்தாளர் தமிழ்ச் சொல்லான நாயக் அல்லது நாயகாவுக்குப் பதிலாக