பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 108

பிழையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்). அதாவது காயலில் வசித்து வந்ததாகவும் கூறுகிறார். இதிலிருந்து திருவாங்கூர் அரசருக்குக் கடற்கரைமீது இருக்கின்ற நேர்மையான உரிமையைவிடச் சிறிது அதிக உரிமை இருந்ததென்பது தெளிவாகிறது. அவர் பரவர்களுக்காக இரக்கப்பட்டார் என்றாலும் கூட உண்மையில் உதவி அளிப்பதற்கு விருப்பமற்றிருந்தார். அடுத்த ஆண்டில் திருவாங்கூரே படகர்களால் முற்றுகையிடப்பட்டது. அப்போது படகர்களின் படை வலிமையுடையதாயிருந்தது. மேலும் கடற்கரைச் செம்படவர்களை எதிர்க்கச் சென்ற போதிருந்ததைவிட அதிக ஆயுத பலமுடையவர் களாயுமிருந்தனர். சில குறிப்புகளின் படி படகர்கள் படைதாக்கிய ஆபத்து நேரத்தில் எதிரிகளின் முன் திடீரென்று சேவியர் தோன்றினமையால் படகத் தலைவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டுத் திருவாங்கூர் அரசர் காப்பாற்றப்பட்டமையால் அவர்தம் படை வீரரைக் காட்டிலும் சேவியருக்கு பெரிதும் கடமைப்பட்டவராய் இருந்தார். இம்முறை படகர்கள் திருவாங்கூரைக் கைப்பற்ற முடியாது போயிற்று. ஆனால், அக்காலத்திற்குப் பிறகு திருநெல்வேலியில் திருவாங்கூர் அரசரின் ஆதிக்கத்தைப் பற்றி நாம் கேள்விப்படவில்லை. அவ்வப்போது மதுரை நாயக்க அரசர்கள் திருவாங்கூர் அரசரிடமிருந்தே கப்பம் வசூலிக்கும் உரிமையைப் பெற்றார்கள் என்றாலும், கட்டாயப்படுத்தப்பட்ட பொழுதுமட்டும் திருவாங்கூர் அரசர் கப்பம் கட்டினார் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. படகர்களுக்கும் பரவர்களுக்குமிடையே இக்குழப்பங்கள் நேர்ந்த காலத்தில் பாண்டிய அரசர்களின் இரண்டாவது வமிசவரிசை அரசர்கள் நாடு முழுவதையும் ஆண்டு வந்தார்கள். என்னிடம் அகப்பட்ட கல்வெட்டு ஒன்றின்படி அக்காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டிய அரசர் விக்கிரம பாண்டியர் என்பது தெரிகிறது. ஆனால், அவரைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை; அவரை மதிக்கவுமில்லை.

விசயநகர இராயர்களின் பிரதிநிதிகளாயும் தூதர்களாயுமிருந்த படகர்கள் திருநெல்வேலிக் கடற்கரையில் வசித்துவந்த சாதுகளாயிருக்கலாம். உள்நாட்டு வெளிநாட்டுக் கிறிஸ்தவர்களைக் கடற்கரையினின்றும் விரட்ட அவர்கள் தீர்மானித்ததாகச் சொல்லப்படுகிறது. எப்பொழுது இத்தீர்மானம் ஏற்பட்டது? மதுரை நாயக்கர்களே பிற்காலத்தில் ராபர்ட் - டி - நொபிலி என்பவருக்கும் அவரால் மதம் மாற்றப்பட்ட கிறித்தவர்களுக்கும் மதுரையிலேயே இடம் கொடுக்க வில்லையா? அப்படியானால், அதே போலக் கிறிஸ்தவப் பரவர்களுக்கு ஏன் இடம் கொடுக்க இசையவில்லை? பரவர்கள் மதம் மாறியது மட்டுமின்றி, தேசிய மாற்றமும் அடைந்தார்கள் என்பதே