பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109 கால்டுவெல்

 அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். சேவியரே தம் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பரவர்களைப் போர்ச்சுகீசிய மேன்மைதங்கிய அரசரின் குடிகள் எனக் கூறுகிறார். மீன்பிடிக்கும் கடற்கரையிலுள்ள சிவில் கொலை நியாயமன்றங்கள் எல்லாம் போர்ச்சுகீசியரால் கைப்பற்றப்பட்டது. எல்லாக் கடன்களும் வரிகளும் முத்துக் குளித்தலிலிருந்து கிடைக்கும் அதிகமான இலாபமும் போர்ச்சுகீசிய வைசிராயினால் நியமிக்கப்பட்ட கவர்னரால் வசூலிக்கப்பட்டன என்பதைத் தவிர, வேறு எந்தக் கருத்தும் இரண்டு ஆண்டுக்காலம் அங்கு வாழ்ந்த சேவியராலோ, மற்றவர்களாலோ எழுதப்படவில்லை. போர்ச்சுகீசியர்கள் உள்நாட்டு அரசர் யாருடைய இசைவும் பெறாமலே தங்கள் குடியேற்ற நாடுகளை உருவாக்கினார்கள். முத்துக்குளிக்கும் கடற்கரை முழுவதையும் ஆட்படுத்தி அங்கும் அவர்கள் விருப்பம்போலக் குடியேற்ற நாடுகளை நிறுவி, பரவர்களுக்குப் போர்ச்சுகீசிய மக்கள் என்ற ஆபத்தான சிறப்பு உரிமையையும் வழங்கினார்கள். எனவே, படகர்கள் அல்லது மதுரை நாயகர்கள் திரும்பத் திரும்பப் பயங்கரமாகப் பரவர்களைத் தாக்கினார்கள். போர்ச்சுகீசியருக்கு வரியோ கப்பமோ கொடாமல் தங்களுக்கே அவைகளைக் கொடுக்குமாறு பரவர்களை வற்புறுத்தினார்கள். சேவியர் தம் விசுவாசிகளைப் படகர்களின் கொடுமையினின்றும் காப்பாற்ற பலவழிகளை மேற்கொண்டார்; எனினும், பரவர்களை அவர்களிடமிருந்து கேட்கப்பட்ட வரியைச் செலுத்தும்படியோ மதுரை அதிகாரத்தினருக்கு அடங்கியிருக்கும்படியோ அவர் யோசனை கூறிய செய்தியோ இடம் பெறவில்லை.

பொதுவாகக் கடற்கரை குமரிக்கரை என்று சேவியரால் வழங்கப்பட்டது. அக்கரை ஓரத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்ற போது குமரிக் கிராமங்களிலும் திரிந்து அலைந்து கொண்டு வந்தார். அப்போது மதம் மாறிய கிறித்தவர்கள் குமரி மக்களைக் கிறித்தவர்களாக மாற்றினார்கள். பின்பு எவ்வாறோ அக்கரை சாதாரணமாகப் பெங்காரியா என்று வழங்கப்பட்டது. முத்துக்குளித்தலைக் குறிக்கும் ‘மீன்சலாபம்’ என்பதே இதன் பொருள். இதை நடத்தும் கடற்கரையிலுள்ள போர்ச்சுகீசியத் தலைவனுக்கு ‘முத்துச் சலாபத் தலைவன்’ என்ற பெயர் ஏற்பட்டது. அந்தக் காலத்திலே முத்துக்குளித்தலில் ஏற்பட்ட இலாபங்களை அனுபவித்த போர்ச்சுகீசியர் அவர்களுக்குப் பின்வந்த டச்சுக்காரர்களைவிட ஆகூழாளர்கள். ஏனெனில், டச்சுக்காரர்கள் முத்துக்குளித்தலில் உண்டான இலாபத்தில் ஒரு பகுதியை மதுரை நாயக்கருக்கோ அல்லது இராமநாதபுர சேதுபதிக்கோ செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், போர்ச்சுகீசியர் காலத்தில் அவர்கள்