பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 110


சிலகாலம் மிக்க வலிமை வாய்ந்தவர்களாயும் உள்நாட்டு அரசர்கள் வலிமையிழந்தவர்களாயும் இருந்தமையால் முத்துக் குளித்தலில் உண்டான இலாபம் அனைத்தையும் போர்ச்சுகீசியரே துய்க்கட்டும் என விட்டுவிட்டனர். போர்ச்சுகீசியர் வலிமையிழந்த காலத்தில் நாயக்கர்கள் அதிகாரபலம் பெற்ற போது வேறுவிதமான ஒப்பந்தம செய்யப்பட்டது.

குரேரியா எழுதிய ‘கடற்கரையிலுள்ள மதபோதகர்களின் உறவு’ என்ற புத்தகத்தில் (1604 இல்) நாயக்கர்கள் அந்த நாடடின குடிகளாய் இருந்தார்கள் என்றும், அவர்கள் மதுரையைத் தலைநகராக கொண்டிருந்தார்கள் என்றும் குறிப்பிடுவதால், கடற்கரையில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கம் பலவீனமடைந்துவிட்டது என்பது தெளிவாகின்றது. மற்றொரு நம்பகமான இடத்திலிருந்து 1609 இல் பரவர்கள் தங்கள் கடமைகளை மதுரை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்குச் செலுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் அவர்கள் போர்ச்சுகீசியருக்குக் கப்பம் செலுத்தவில்லை. பிஷப்பு பாரட்டி என்பவர் 1615 இல் மக்கள் மதுரை நாயக்கர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டார்கள் என்று குறை கூறியிருக்கின்றார்.

புன்னைக்காயல்

போர்ச்சுகீசியர் இந்தியாவிற்கு வந்திருந்த சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை புன்னைக்காயலே அவர்களது முக்கியக் குடியேற்ற நாடாய் இருந்தது. ‘புன்னை’ என்பது இந்திய நாட்டுப் புன்னைமரம். காயல் என்பது கடலை நோக்கிச் செல்லும் ஆழமில்லாத ஏரி ஆகும். பழைய காயல் தாமிரபரணியின் வடக்கே அமைந்துள்ளது. புன்னைக்காயல் தெற்கே கடற்கரைக்கு வலப்புறத்திலே கடல்வாயிலுக்கருகே அமைந்துள்ளது. இப்போது அது மீன்பிடிக்கும் கிராமமாய் உள்ளது. ஆனால், அதன் பழம்பெருமையை உணர்த்தவல்ல சில அறிகுறிகளும் அங்குக் காணப்படுகின்றன. ஐரோப்பிய மாளிகைகள் பண்டகசாலைகள் இவற்றின் அஸ்திவாரங்களின் சுற்றுச்சுவர்கள் மட்டும் இன்றும் காட்சியளிக்கின்றன. அங்கோ, போர்ச்சுகீசியர் காலத்துக் கோட்டையிருந்ததும் முற்றுகையிடப்பட்டதும் சண்டை நடந்ததும் தோல்வியுற்றதுமாகிய யாவற்றையும் பற்றிய தெளிவான செவிவழிக்கதை இன்றும் வழங்குகிறது. இக்கதை வரலாற்றுக் குறிப்பில் 1552 ஆம் ஆண்டு நிகழ்ச்சி சேவியருக்குப் பின்வந்த பாதர் அந்தோனியோவை அவர் எதிரிகள் கொலை செய்ததைப் பற்றிய கதையும் வழங்குகிறது.

சேவியர் காலத்துப் புன்னைக்காயலைப் பற்றிய பின் வரும்