பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113 கால்டுவெல்


ஒரே கடற்கரையிலேயே நடைபெறும். முத்துக்குளிக்கும் பருவம் ஆரம்பித்தவுடன் தண்ணீரில் எந்த இடத்தில் அதிகப்படியாக முத்துச்சிப்பிகள் இருக்கிறதெனக் கண்டுபிடித்துவரச் சிறந்த முத்துக்குளிப்பவர் சிலரை அனுப்புவார்கள். பிறகு முத்துக்குளிக்கும் இடத்திற்கு நேரே கடலைநோக்கிப் பல வீடுகள், கடைத்தெரு முதலியவைகளைக் கற்களாலேயே கட்டி முத்து நகர் ஒன்றை அமைப்பார்கள். இந்நகரம் முத்துக்குளித்தல் முடியும் வரை இருக்கும். இந்நகரத்திற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படுகின்றன. சிலசமயங்களில் இந்நகரம் ஏற்கெனவே மக்கள் வசிக்குமிடங்களுக்கருகே அமைக்கப்படும்; சில சமயங்களில் மனிதர் வசிக்காத வெற்று இடங்களில் அமைக்கப்படும். முத்துக்குளிப்பவர் அனைவரும் அந்நாட்டைச் சேர்ந்த கிறித்தவரே. கடற்கரையிலுள்ள அர்ச். பாலின் சீடர்களுடைய கோவிலுக்கும் போர்ச்சுகல் அரசருக்கும் குறிப்பிட்ட ஒரு வரி செலுத்தப்பட்ட பின் அந்த முத்துக்குளிப்பவர்கள் முத்துக்குளிக்கும் வேலையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். நான் பயணம் செய்யும்போது ஓர் ஆண்டு அங்கு இருக்க நேர்ந்தது. அப்பொழுது முத்துக்குளித்தலின்போது பின்பற்றப்படும் முறையை நான் கண்டேன். அது வருமாறு:

‘முத்துக்குளித்தல் தொடர்ந்து நடைபெறும் பொழுது மூன்று அல்லது நான்கு மறைவான படைவீரர் எப்பொழுதும் முத்துக் குளிப்பவர்களைக் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அங்கேயே காவல் இருப்பார்கள். வழக்கமாக முத்துக்குளிக்கும் படகுகள் மூன்று அல்லது நான்கு சேர்ந்து கூட்டமாகச் செல்லும். இப்படகுகள் வெனிஸ் நகரிலுள்ள மாலுமிப்படகுகளைப் போலிருக்கும். ஆனால், அவற்றைவிடச் சிறியனவாகவும் எழுவர் அல்லது எண்மரைக் கொள்ளக்கூடியனவாகவும் இருக்கும். ஒரு நாட்காலை அதிக எண்ணிக்கையுள்ள இப்படகுகள் புறப்பட்டு 15 அல்லது 18 பாகங்கள் (90 அல்லது 108 அடி) ஆழமுள்ள தண்ணில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும். இந்தக் கடற்கரைப் பிரதேசங்களின் கடலில் ஆழமே அவ்வளவுதான் இருக்கும். நங்கூரம் பாய்ச்சியபின் அவர்கள் ஒரு முனையில் பெரிய கல் கட்டப்பட்ட கயிற்றைக் கடலைநோக்கி வீசுவார்கள். பிறகு ஒருவன் தன் காதுகளை நன்றாக இறுக்கி மூடி உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக் கொண்டு, கழுத்திலோ அல்லது இடக்கையிலோ ஒரு கூடையைத் தொங்கவிட்டுக் கொண்டு கயிற்றின் வழியாகவே கடலுக்குக் கீழே சென்று, அவனால் எவ்வளவு வேகமாகப் பொறுக்க இயலுமோ அவ்வளவு வேகமாக முத்துச் சிப்பிகளைப் பொறுக்கிக் கூடையை நிரப்பிக் கொள்வான். கூடை நிரம்பியவுடன்