பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125 கால்டுவெல்

மரக்கலமும் அதனதன் இடத்தை அடைந்ததும், அதிலும் பாதி எண்ணிக்கையுள்ள குளியர்கள் கடலில் முழுகுவார்கள். ஒவ்வொருவரும் வேகமாய்த் தண்ணீருக்குள் முழுகத் தம் காலில் கனமான கல்லைக் கட்டிக் கொள்வர். அவர்கள் தங்களுடன் ஒரு சாக்குப் பையையும் கொண்டு செல்வார்கள். அவர்கள் உடலில் கயிற்றின் ஒரு முனை பிணைக்கப்பட்டிருக்கும். மற்றொரு முனையை ஒரு கம்பியின் வழியாகச் சுற்றிப் படகிலிருப்பவர்கள் பிடித்துக் கொள்வார்கள். இவ்வளவும் செய்து கொண்டு முத்துக்குளிப்பவன் கடலில் மூழ்கி, அடிப்பாகத்தை அடைந்ததும், அவனுக்கு மூச்சுத் தடுமாறும்வரை சாக்கு நிறைய முத்துச்சிப்பிகளைப் பொறுக்கிப் போட்டுக் கொள்வான். அவனிடம் கொடுக்கப்பட்டிருக்கும் கயிற்றை இழுத்தால், அந்தச் செய்கையைக் கடலின் மேலிருக்கும் படகிலிருப்பவர்கள் அறிந்து கொண்டு உடனடியாகக் கயிற்றை மேல்நோக்கி இழுப்பார்கள். முத்துக் குளிப்பவனும் முத்துச் சிப்பி நிரம்பிய சாக்கும் மேலே படகிற்குக் கொண்டுவரப்படும். தண்ணீருக்குள் மனிதன் நெடுநேரம் தங்குவதற்கான செயற்கை சாதனங்கள் ஒன்றையும் பயன்படுத்துவதில்லை. அவர்கள் குழந்தைப் பருவம் முதல் இத்தொழிலில் பழக்கப்பட்டு விடுவதால், எளிமையுடன் திறமையுடன் இதைச் செய்து முடிப்பார்கள். சிலர் மற்றவர்களைவிட அதிக நேரம் தண்ணீருக்குள் இருக்கும் திறமையுள்ளவராயிருப்பர். ஆனால், அவர்கள் திறமைக்குத் தக்கபடி பணம் கொடுக்கப்படுவதில்லை. இது வழக்கமாகவே இருந்து வந்தது. இதனால் பல போட்டிகள் ஏற்பட்டதுமின்றி, அஞ்சத்தக்க விளைவுகளும் அடிக்கடி ஏற்படுவதுண்டு. மற்றக் குளியர்களை முந்தி விட வேண்டுமென விரும்பி முத்துக்குளிப்பவர் சில சமயங்களில் அதிக முத்துச்சிப்பிகளைச் சேகரிக்க எண்ணி அதிகநேரம் தண்ணீருக்குள் தங்குவர்; இதனால் இறுதியில் கயிற்றை இழுத்துப் படகிலுள்ளவர்களுக்குச் சமிக்கை செய்யக் கூடத் திறனற்று மயங்கிவிடுவர். சில சமயங்ளில் பாதியோ அல்லது முழுதுமோ மூழ்கி விடுவார்கள். பேராசைக்காரக் குளியர்கள் அடிக்கடி தங்கள் அருகில் தண்ணீருக்குள் முத்துச் சேகரிக்கும் குளியர்களைத் தாக்குவார்கள். இவ்வாறு தாக்கப்பட்ட முத்துக்குளியர்கள் தாங்கள் கடலில் மூழ்கும்போது தங்களுடன் கத்திகளையும் எடுத்துச் சென்று முத்துகளைக் கொள்ளையடிப்பவர்களைக் கடலின் படுகையிலேயே கொலை செய்துவிடுவதும் உண்டு என்பதற்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. முதலில் குளித்த குளியர்கள் மேலே வந்ததும், அவர்களுடைய முத்துகளைச் சோதித்துப் படகின் கீழறையில் கொட்டிவிடுவார்கள்.