பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

திருநெல்வேலி சரித்திரம்

பிறகு அடுத்தக் கூட்டம் தண்ணீருக்குள் மூழ்கும். சிறிது இடைவெளிக்காலத்திற்குப்பின் முதல் கூட்டம் மறுபடியும் மூழ்கும். அடுத்தபடி இரண்டாவது கூட்டம் மூழ்கும். இப்படியே வரிசைப்படி, மாறிமாறி இரு கூட்டத்தினரும் முத்துக் குளிப்பர். இந்த வேலை மிகக் கடினமானது. மிக்க வலிமைவாய்ந்த ஒருவன் ஒரு நாளில் ஏழு அல்லது எட்டு முறைக்குமேல் கடலில் மூழ்க இயலாது. அதனால், நண்பகலுக்கு முன் முத்துக் குளித்தல் முடிந்து விடும்.

முத்துக்குளித்தல் முடிந்ததும் மரக்கலங்களைக் கரைக்குக் கொணர்ந்து தங்கள் முத்துச்சிப்பிகளை ஒப்படைத்து விடுவார்கள். முத்துச்சிப்பிகள் அனைத்தும் ஒருவகைப் பூந்தோட்டங்களில் எறியப்படும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அப்படியே அவைகளை அங்கேயே போட்டு விடுவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் சிப்பிகளைத் திறந்து தங்கள் புதையல்களை வெளியே எடுப்பார்கள். முத்துச்சிப்பிகளிலிருந்து முத்துகளை எடுத்துக் கவனமாய்க் கழுவி உலோகக் கொள்கலங்களில் வைப்பார்கள். இவைகளில் அளவீடுகளுள்ள ஐந்து அல்லது ஆறு சல்லடைகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று அடுத்தடுத்த இரண்டிற்குமிடையே இடைவெளியிருக்குமாறு பொருத்தப்பட்டிருக்கும். அந்தச் சல்லடைகளில் பலவித அளவு உள்ள துவாரங்கள் இருக்கும். மேலே இருக்கும் சல்லடையில் துவாரங்கள் மிகப்பெரியனவாய் இருக்கும். கீழே அடியிலிருக்கும் சல்லடை துவாரங்கள் சிறியனவாய் இருக்கும். முதலில் மேலே இருக்கும் சல்லடையில் முத்துகளைக் கொட்டினால் மிகச் சிறந்த முத்துகளைத் தவிர மற்றவை எல்லாம் இரண்டாவது சல்லடையில் விழும். அவற்றுள் பல முத்துகள் 3, 4 அல்லது 5வது சல்லடைக்குச் செல்லும். எல்லாவற்றிலும் மிகச் சிறிய முத்துகள் கீழேயுள்ள கொள்கலத்தில் வடிகட்டப்படும். அவை நிலையாகத் தகுந்த சல்லடைகளில் சேர்ந்த பின் தரவாரியாகப் பிரிக்கப்பட்டு மதிப்பிடப்படும். மிகப் பெரிய முத்துக்களே மிக உயர்ந்த மதிப்புடைய முதல்தர முத்துகள். இச்செய்திகளை எல்லாம் தருகின்ற அந்தக் கடிதத்தில் முத்துக்களினுடைய மதிப்பு அதனுடைய உருவத்தைப் பொறுத்தே உறுதி செய்யப்படுகிறது. உருவிலும் பளபளப்பிலும் குறைவாயிருப்பவை குறையுள்ளவை என்று கூறப்படும் என்பது விளக்கமாகச் சொல்லப்படுகிறது. மதிப்புகள் கொடுக்கப்பட்டு முடிந்ததும் மிக உயர்ந்த முத்துக்களை டச்சுக்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள். அவர்கள் எல்லோர்க்கும் முதலில் வாங்கக் கூடிய அதிகாரம் இருக்கிறதென எண்ணி வந்தனர். அதே சமயத்தில் விருப்பமற்ற தனி வியாபாரிகளைக் கட்டாயப் படுத்துவதுமில்லை.