பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 128


ஏதேனும் ஓர் இடத்தில் முத்துக்குளித்தல் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. ஆனால், பிற்காலத்தில் அடிக்கடி இழப்பு ஏற்பட்டதெனக் கூறப்படுவதை நான் கண்டேன். ஆனால், அது ஒரு முழு வமிச காலத்திற்கு நிலையாகிவிட்டது. கொச்சி பிஷப்பான பாரெட்டோ 1615இல் வெளியிட்ட மதபோதனையில் முத்துக்குளியல் கடற்கரையில் நடந்த முத்துக்குளியல்கள் முப்பது நான்கு ஆண்டுகளாக இழப்பையே விளைத்தன என்று குறிப்பிட்டிருப்பதாக டாக்டர் பர்னல் என்னிடம் கூறினார். மறுபடியும் முத்துக் குளித்தல் நானகு ஆண்டுகட்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் அடிக்கடி இழப்பை உண்டு பண்ணிய முத்துக்குளியல் ஆரம்பம். இதுவே இக்காலத்து முத்துக்குளியலின் முக்கிய இயல்பாயும் இருக்கிறது. 1700 இல் ஏற்பட்ட இழப்பைப்பற்றி, தவத்திரு. மார்ட்டின் கூறுவதை நாம பார்த்தோம். 1784இல் கிழக்கு இந்தியக்கம்பெனியின் மேற்பார்வையில் முதன் முதல் முத்துக்குளியல் நடைபெற்றது. இந்த வருமானத்தை மேற்பார்வையிடும் அதிகாரியாக அல்லது ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் பெருமைக்குரிய இர்வின் என்பார். இந்த ஆண்டில் நடந்த முத்துக்குளியலிலும் இழப்பு ஏற்பட்டதென அவர் கூறுகிறார். அத்தகைய இழப்புகளுக்குக் காரணம் இன்றுவரை இன்னதென்று அறிந்து கொள்ள இயலாத மறைபொருளாய் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

டச்சுக்காரர்களின் ஆதிக்கம்

தூத்துக்குடியில் டச்சுக்காரர்களின் முதல் ஆதிக்கம் ஏற்பட்ட காலம், டச்சு சமாதிக்கல்லில் காணப்படும் 1706 ஆம் ஆண்டுதான்.

ஓர்மில் டச்சுக்காரரைப் பற்றிய செய்தி குறிப்பிடப்படுகிறது. அதில் 1706 இல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்பான குறிப்புதான் அடுத்தபடியாகத் தூத்துக்குடி டச்சுக்காரரைப் பற்றியுள்ளது. பாளையக்காரர்கள் அடிக்கடி டச்சுக்காரர்களின் உதவியையும் ஊக்கத்தையும் பெற்றுவந்தனர் என்பது தெரிகிறது.

பிறகு அடங்காத திருநெல்வேலிப் பாளையக்காரருடன் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்குப் பகையாக, நிலையான உடன்பாடு செய்துக் கொண்டதாகக் கர்னல் புல்லர்ட்டன் என்பவர் கூறுகிறார். தேசியப் பொறாமை காரணமாக ஆங்கிலேயர்கள் ஆதாரமற்ற செய்திகளாகச் சொல்லவில்லை. ஏனெனில், கர்னல் புல்லர்ட்டன் பாளையங்குறிச்சியை 1763 இல் கைப்பற்றியபோது கொழும்பிலிருந்த டச்சு அரசாங்கத்தினருக்கும் கட்டபொம்ம நாயக்கனுக்கும் ஏற்பட்ட