பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137 கால்டுவெல்

கூட்டத்தினரிடையே போட்டியும் பூசல்களும் கிளம்பின. இந்நிகழ்ச்சிகள் நேர்ந்த வரலாற்றிலேதான் நாம் முதல் தடவையான திருநெல்வேலி வரலாற்றின் ஒரு பகுதியைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இந்நிலையில் ஓர்மினுடைய சிறந்த உதவியை நாம் பயன்படுத்திக் கொள்ள வசதி இருக்கிறது. வரலாற்றின் இப்பகுதியை ஆரம்பிப்பதற்கு முன்னே எப்படியும் திருநெல்வேலி நகரைப் பற்றியும் பாளையங்கோட்டையிலுள்ள கோட்டையைப் பற்றியும் அடிக்கடி நாம் குறிப்பிட வேண்டியிருப்பதால் அவைகளைப் பற்றிச் சில குறிப்புகளைக் கூறுவது விரும்பத்தக்கது.

திருநெல்வேலி நகரம்

திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பழமையான தலைநகரம். பாளையங்கோட்டை மிகப் புதிய தலைநகரமாகும். பாண்டிய அரசர்களின் காலத்தில் அந்த மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாய் இருந்ததைத் தவிர வேறு சிறப்புடையதாய் இருந்ததெனக் கூற இயலாது. ஆனால், மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் பெரும்பகுதி நாடுகளில் அவர்கள் நாட்டின் தென்பகுதியின் தலைநகராய் அது சிறப்புப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் போட்டியாகச் சிறப்புற்றிருந்த முக்கிய இடம் திருவில்லிப்புத்துராகும். அங்கேநாயக்க அரசர்கள் சிலர் அடிக்கடி சென்று தங்குவதற்கு விரும்பினர். அது ஒரு மாவட்டத்தின் தலைநகராய் இருந்தும் செல்வாக்கு நிரம்பிய சுற்றுப் பகுதிகளையுடைய சிறப்பான இடமாய் இருந்தும் - அதை அரணிட்டுக் காக்கவில்லை என்னும் செய்தி வேடிக்கையாகத்தான் தோன்றுகிறது. ஆயினும், அங்கிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள பாளையங்கோட்டையில் எப்பொழுதும் தக்க பாதுகாப்பு இருந்து வந்தது. இதுவே போதுமான பாதுகாப்பாகவும் கருதப்பட்டது. திருநெல்வேலி நகரமும் அதைச் சார்ந்த கிராமங்களும் சுற்று வட்டாரங்களும் திருநெல்வேலி என்று பிற்காலத்தில் எழுதப்பட்டது நாம் அறிந்த உண்மை. திருநெல்வேலி என்றால் புனிதமான நெல்லுக்கு வேலி என்பது பொருள். ‘திரு’ என்பது வடமொழி ‘ஸ்ரீ’ என்பதன் மொழி பெயர்ப்பாகும். (திருவிலிருந்து ஸ் வந்திருக்கக் கூடாதா? - ந.ச.). இதற்குப் ‘புனிதமான’ என்பது பொருள். நெல் என்பது உமியுடன் இருக்கும் தானியம்; வேலி என்பது காவல். திருநெல்வேலி கோவில் தலபுராணத்தில் நெல் என்பதற்கு மூங்கிலரிசி என்றும் நெல் அரிசி என்றும் இரு பொருள்கள் காணப்படுகின்றன. எனவே, அச்சொல் புனித மூங்கில் வேலி என்றும் பொருள்படுகிறது. இது மிக்க பொருத்தமான