பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139 கால்டுவெல்

வழங்கப்படுகிறாள். காந்திமதி என்பது காந்திமான் என்பதன் பெண்பால், ஒளி பொருந்தியது என்பது இதன் பொருள். திருநெல்வேலி நகரம் இப்போது 20,000 ஜனத்தொகை கொண்ட ஒரு நகராட்சியாய் இருக்கிறது.

பாளையங்கோட்டை

திருநெல்வேலி மாவட்டத்தின் இப்போதைய தலைநகராகிய பாளையங்கோட்டை, 18,000 மக்கள் தொகையுள்ள நகராட்சிக்குட்பட்ட ஒரு நகரம். அது தாமிரபரணியின் தெற்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இங்கிருந்து வடக்கே இரண்டு மைல் தூரத்தில் திருநெல்வேலி அமைந்துள்ளது. உள்ளூரில் வாழ்ந்த பெருஞ்செல்வராகிய சுலோசன முதலியார் என்பவர், தம் முழுச் செலவிலே கர்னல் - கார்ஸ்லே என்பவரால் தாமிரபரணிக்குக் குறுக்கே கட்டப்பட்ட அழகிய பாலத்தினுதவியால் இரு நகரங்களுக்குமிடையே உறவு போக்குவரவு முதலியவை 1844 ஆம் ஆண்டிலிருந்து எளிமையாக்கப்பட்டன. பாளையங்கோட்டை அரணின் சிதைந்த சில அடையாளங்கள், இப்போதும் இருக்கின்றன. அவற்றுள் பல அவசியமற்றவை என அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டன. எனினும், முதலில் ஆங்கிலேயர் திருநெல்வேலியில் வந்திறங்கியபோது தென்மதுரையில் மிக்க பலம் வாய்ந்த கோட்டை அதுதான் என்பதைக் கண்டனர். அது கோட்டையாயிருந்ததன்றி, அரணுள்ள நகராயும் விளங்கியது. மேலும் அந்நகரம் இரண்டு அரண்களால் காக்கப்பட்டிருந்தது. வெளி அரண் உள் அரணைவிடக் குள்ளமாயும் சிறந்த கொத்தளத் தொகுதிகளையும் பலம் வாய்ந்த கோட்டை வாயில்களையும் உடையதாயும் இருந்தது. எல்லா அரண்களும் வெட்டுக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கற்கோட்டை தெற்கே தூரத்தில் அமைந்திருந்ததால், ஐரோப்பியர்களுடைய எந்தத் தாக்குதலுக்கும் அது இலக்காகவில்லை. உள்நாட்டினராலும் எந்தவிதமான கடுமையானத் தாக்குதலுக்கும் இலக்காகவில்லை. 1789 இல் திப்புசுல்தான் வட திருவாங்கூர்த் தொகுதியைக் கைப்பற்றித் தன் படைகளைத் திருநெல்வேலி மதுரையைச் சுற்றிக் கொண்டு அவன் எண்ணியது போல் ஆங்கிலேயரைப் பின்புறமாகத் தாக்குவதற்கு முற்பட்டிருந்தானானால், பாளையங்கோட்டையிலுள்ள கோட்டையின் வலிமைக்கு ஒரு சோதனைக் காலம் ஏற்பட்டிருக்கலாம்.

தமிழில் பாளையம் என்பதன் பொருள், பாசறைக் கோட்டை என்பது. பாளையம் என்பது உண்மையில் பாசறை. அடுத்தபடி