பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 6

இவ்வாறு செவிவழிக் கதைகள் இச்செய்தியைப் பற்றி ஒன்றும் கூறாது விட்டுவிடுவதால், நாம் இப்போது காணும் பல்வேறு சாதியினரையும் கூட்டத்தினரையும் குறிக்கும் குடியேற்ற மக்களின் கூட்டங்கள் வருவதற்கு முன்பே அந்த மாவட்டங்களில் பள்ளர்களும் பறையர்களும் இருந்தார்களென ஊகிக்கலாம். குடியேறிய கூட்டத்தினரின் பழைமையைப் போன்றே இப்போது அவர்களுக்கு வழங்கிவரும் பெயர்களும் பழைமையுடையனவாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ‘பறையர்கள்’ என்பது ‘பறையடிப்பவர்கள்’ என்று பொருள்படும். பள்ளமான நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைப் ‘பள்ளர்’ என்று குறிப்பிட்டமை தெரிகிறது. இந்த இரு பெயர்களும் ஒருவாறு வளர்ந்த சமுதாயத்தோடு அவர்களைத் தொடர்புபடுத்துகின்றன. அவர்கள் உண்மையில் பழைமையான சாதியினராய் இருப்பின், வேடர்கள் என்று சாதாரணமாக வழங்கப்படும் கொடிய சாதியினரைப் போலவே வேட்டையாடியும், புன்செய் பயிர்களைப் பயிர் செய்தும் மாவட்டங்களில் குடியேறியிருக்க வேண்டும். மக்கள் இன நூலின்படி உழுது பயிர் செய்யும் தொழிலே வேளாளர்களின் சிறந்த தொழிலாய் இருந்தது. ‘வேளாளர்’ என்பதன் பகுதியாகிய ‘வேள்’ என்பது, நீர்ப்பாசனத்திற்குப் பயன்படும் தண்ணீர் என்ற பொருளில் வரும் வெள்ளம் என்ற சொல்லின்பகுதியாகிய ‘வெள்’ என்பதோடு பொருந்தி இருக்கிறது. எனக்கு இப்போது தெரிந்தவரை திருநெல்வேலியின் பழங்குடி மக்களைப் பற்றிய மிகுதியான குறிப்புகள் சேரமாதேவி, புதுக்குடி என்ற இடங்களுக்கருகில் கண்டெடுக்கப்பட்ட சூல (மூவிலை வேல் - ந.ச.) ஆயுதங்களேயாகும். டாக்டர் ஜாகோர் (Dr.Jagor) என்பவரால் அவை பெர்லினுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவ்வாயுதங்களின் பக்கங்களும் வடிவங்களும் சமன் செய்யப்பட்டிருந்ததால் இவை நாகரிகத்தின் சிறு முன்னேற்றத்தைக் குறித்தன. இவை நவீனக் கற்காலத்திற்குப் பொருத்தமானவாய் உள்ளன. திருநெல்வேலியில் ஏறக்குறைய எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்கும் முதுமக்கள் தாழியின் மதிப்பும் மறையும் (இரகசியமும்) எவையாயினும், அவை பழங்காலத்தின் நினைவுச்சின்னங்கள் என என்னால் மதிப்பிட இயலவில்லை. மட்பாண்ட வேலையின் உயர்வையும் சிலபோது அம்மட் பாண்டங்களிலிருந்து கிடைக்கும் செப்பு நகைகள் முதலியவைகளையும் பார்க்கும்போது அம்மட் பாண்டங்களில் இறந்தவர்களைப் புதைத்துவந்த மக்கள் யாராயிருந்த போதிலும் எவ்வளவு காலத்திற்கு முந்தி வாழ்ந்தவர்களாயிருந்த போதிலும் - நாகரிகமடைந்த பிரிவினராயிருந்தார்கள் என்பது உறுதியாகிறது.[1]

  1. பிற்சேர்க்கை பார்க்க.