பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 142

கோவில்களிலிருந்த கற்களை மட்டுமின்றி, நல்ல நிலையிலிருந்த சில கோவில்களையும் அழித்து, அவற்றிலுள்ள கற்களையும் பெயர்த்துக் கோட்டை கட்டப் பயன்படுத்திக் கொண்டான். அவ்வாறு நல்ல நிலையிலிருந்து அழிக்கப்பட்ட கோவில்களுள் ஒன்று பாளையங்கோட்டைக் கருகே ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மூர்த்தியபுரம் என்னும் இடத்திலுள்ள கோவிலாகும். குள்ளமான வெளிக்கோட்டை பாளையங்கோட்டை அல்லது குழந்தைக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. இரண்டு கோட்டைகளிலும் இது சிறியதாயிருப்பதால் இப்பெயர் பெற்றது. ஆனால், இது பிள்ளையினுடைய கோட்டை என்றுதான் பொருள் படுமென உள்நாட்டவர் சிலர் கூறுகின்றனர். பிள்ளை என்ற இப்பெயர், மகமது யூசுப்கானைக் குறிக்கிறது. இவன் சாதாரணமாய்க் கான்சாகிபு என்று வழங்கப்பட்டான். இவன் பிள்ளை என்ற சாதிப் பெயரையுடைய வேளாளர் குலத்தைச் சேர்ந்த ஹிந்துவாய் இருந்து பின்பு முகம்மதியன் ஆனமையால், இவனை அடிக்கடி பிள்ளை என்று வழங்கி வந்தனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியார் வாணிகம் நடத்திய காலத்தில் பாளையங்கோட்டையில் ஒரு வாணிகப் பிரதிநிதியை வைத்திருந்தனர். அவர்களுடைய பொருள்களுக்காக அங்கே ஒரு பண்டகசாலையும் பிரதிநிதியின் வீட்டருகே ஆற்றங்கரையில் ஒரு பஞ்சு ஆலையும் இருந்தன. (தூத்துக்குடியில் முதன் முதல் பஞ்சு ஆலை உண்டான குறிப்பை 83 ஆம் பக்கத்தில் பார்க்க). 'ஓர்ம்' என்பவர் 1756 இல் பாளையங்கோட்டையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் கோட்டையின் கொத்தளங்கள் எல்லாம் அழிந்திருந்ததாகவும் பயங்கர பீரங்கிகளில்லாத எதிரியின் தாக்குதலினின்றும் காப்பாற்றத்தக்க நிலையில் அது இருந்ததென்றும் கூறுகிறார். மகம்மது யூசுப்கான் படைகளை நிருவகிக்கவும் நியமிக்கப்பட்டான். உடனே அவன் பாளையங்கோட்டையைப் பலம்வாய்ந்த இடமாக்க எண்ணி, கோட்டை கட்ட ஆரம்பித்தான் என்பதில் ஐயமில்லை. இது 1765 இல் இராணுவப்படையால் அரணிடப் பட்டமை தெரிகிறது. 1771 இல் புகழ்வாய்ந்த கிறித்தவ மத குருவான ஸ்வார்ட்ஸ் என்பவரின் பத்திரிகைகளில் இதைப் பற்றிய குறிப்பு முதலிற் காணப்பட்டது. அக்கோட்டையில் ஆங்கில இராணுவப்படை இருந்ததாகவும், கோட்டை நவாபுவின் வசமிருந்ததாகவும் அவர் கூறுகிறார். பாளையங்கோட்டையிலுள்ள ஆங்கிலக் கிறித்தவக் கோவிலில் காணப்படும் பழமையான ஆண்டு 1775.

திருநெல்வேலியிலுள்ள நவாபு அரசாங்கத்திற்குக் கிழக்கு