பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145 கால்டுவெல்


என்று வழங்கப்பட்டான். ஓர்மினால் குறிக்கப்படாத இவனைப் பற்றிய சில குறிப்புகளை நான் இங்குத் தருகிறேன். 1754க்குச் சிறிது காலத்திற்கு முன்பு யூசுப்கான் கம்பெனியாரின் சுதேசிப்படைகளின் தலைவனாய் வேலை பார்த்து வந்தான். அந்த அலுவலில் அவன் மிக்க திறமையுடனும் ஊக்கத்துடனும் வலிமையுடனும் நடந்து சிறப்பெய்தினான். இது அவனுடைய ஐரோப்பியத் தலைவர்களுக்கு மிகவும் திருப்தியாய் இருந்தது. அதனால், அப்பொழுது கமாண்டர்-இன்-சீப் ஆக இருந்த ஜெனரல் லாரென்ஸ் என்பவரின் பரிவுரையால் 1754 ஆம் ஆண்டு, மார்ச் 25 ஆம் தேதி அரசாங்கம் அவனைக் கம்பெனிச் சிப்பாய்கள் அனைவருக்கும் நிலையான தலைவனாக நியமித்தது. அதேசமயத்தில் தன் அன்பின் அடையாளமாக ஒரு தங்கப்பதக்கத்தையும் அவனுக்குப் பரிசாகக் கொடுத்தது அரசாங்கம்.

1756 இல் திருநெல்வேலியில் ஒழுங்கை நிலைநிறுத்த ஒரு படையுடன் யூசுப்கான் சென்றதைக் கண்டோம். அந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி காப்டன் காலியட்டு மூலமாக அரசாங்கத்தினர் யூசுப்கானுக்குக் கட்டளையிட்டனர். இதிலிருந்து படைத்தலைமைப் பதவிமட்டுமின்றி வரிவசூல் செய்யும் வேலையும் அது தொடர்பான தகராறுகளைத் தீர்க்கும் எல்லா அதிகாரமும் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது தெரிகிறது. ஆனால், அவன் அவ்வப்பொழுது எங்கெங்குச் செல்கிறான் என்பதைப் பற்றிய செய்தி விளக்கத்தை உடனுக்குடன் காப்டன் காலியட்டுக்குத் தெரிவிக்கவேண்டுமென்றும் வசூலான தொகை யாவற்றையும் அவனிடம் செலுத்த வேண்டுமென்றும் அவனுக்கு நிபந்தனை இடப்பட்டிருந்தது. வரிவசூல் செய்யும் அதிகாரியாக அந்தக் காலத்திலிருந்து 1763 வரை இருந்தபோது அடைந்த வெற்றிகளைப் பற்றிக் கனிம் லூஷிங்டன் சொற்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவை இனிச் சொல்லப்படும்.

ஆங்கிலேயருடன் உடன்பாடு

கான்சாகிபு என்ற பெயர் உள்நாட்டிலேயே 'கான்சா' என்று மருவியது. மக்கள் அப்பெயராலேயே அவனை நினைவு கூர்ந்திருந்தார்கள். அவன் காலம் சாதாரணமாகக் 'கான்சா காலம்' என்றே வழங்கப்படுகிறது.

கர்னல் ஹெரானுடைய படை எதிர்ப்பின்றி மதுரையைக் கைப்பற்றியது. அப்பொழுது 'பாளையக்காரர்' அல்லது 'இராமநாதபுர ராஜா' எனப்படும் சேதுபதியாகிய மறவர் பாளையக்காரரிடமிருந்து