பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147 கால்டுவெல்


கட்டபொம்மன்

‘சுமார் மார்ச்சு மாதத்தின் நடுவில் படைகள் திருநெல்வேலி நகரத்தை அடைந்தன. தலைநகரத்திலும் அதைச் சூழ்ந்த நாட்டிலுமிருந்த வாடகைக்காரர்கள் எவ்விதத் தடையுமின்றி நவாபுவுக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால், அங்கிருந்த பாளையக்காரர் பலர் நவாபுவுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தைச் செலுத்தாமலே ஏமாற்ற எத்தனித்து வந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவன் கட்டபொம்ம நாயக்கன். அவனுடைய நாடு திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே ஐம்பது மைல் தூரத்திலிருந்தது. கட்டபொம்மனைப் பணியவைத்துவிட்டால் அவனைவிடச் சிறிய பாளையக்காரர்களைச் சீக்கிரத்திலேயே அடக்கிவிடலாமென்று நம்பியதால், 200 ஐரோப்பியரும் 500 சிப்பாய்களும் அடங்கிய படை இரு சிறு பீரங்கிகளுடன் அவனை அடக்க அனுப்பப்பட்டது.

இந்தக் கட்டபொம்ம நாயக் என்னும் கட்டபொம்ம நாய்க்கன் பனியலன் குறிஞ்சி என்ற (பணியலன் குறிஞ்சி!? - ந.ச.) பாஞ்சாலங்குறிச்சிக்குப் பாளையக் காரனாய் இருந்தான். பாஞ்சாலங்குறிச்சி இப்போது தாலுக்கா நகரமாகிய ஒட்டப்பிடாரத்திற்கருகே (இந்த ஆண்டு நூற்றாண்டு பெறும் கப்பலோட்டிய தமிழர் - வ.உ.சி. பிறந்த ஊர் - ந.ச.) உள்ள கோட்டை இந்த இடத்திற்கு அனுப்பப்பட்ட பல படையெடுப்புகளில் இதுதான் முதற்படையெடுப்பு: 1801 இல் நடைபெற்றது. இவனுக்குப் பின்வந்த பிற்காலத்துப் பாளையக்காரர் ஒவ்வொருவரும் ‘கட்டபொம்ம நாயகர்’ என்று வழங்கப்பட்டனர். இப்பெயர் ஒரு குடும்பப் பெயராய் இருந்தது. கர்னல் ஹெரானின் காலத்தில் சேனாதிபதியாய் இருந்தவன் ஜகவீர கட்டபொம்ம நாயக்கன். இவன், 1760 இல் இறந்தான். இவனுக்குப் பின் வந்த பாளையக்காரன் 1791 இல் இறந்தான். அவனும் முந்தியவனைவிட மிக்க உறுதியுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தான். இந்தப் பகைமை 1799 இல் உச்ச நிலையை அடைந்தது. மற்றொரு எதிர்ப்பு 1801 இல் கர்னல் அக்கினியூவிற்கு எதிராகச் சிவகங்கை பாளையக்காரனால் ஏற்பட்டது. கர்னல் ஹெரானால் பாஞ்சாலங்குறிச்சிக்கு எதிராக அனுப்பப்பட்ட படை, ஒன்றுமே சாதிக்கவில்லை. அவனுடைய முழுப்படையும் ஏறக்குறைய உடனே திருச்சிக்கு மறுபடி அழைக்கப்பட்டது.

பயங்கரப் படுகொலைகள் செய்த ஆங்கிலச் சிப்பாய்கள்

அந்தப் படையெடுப்பிற்குச் சில நாட்களுக்குப் பின் நூறு