பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7 கால்டுவெல்


முதுமக்கள் தாழிகள்

மேலே குறிப்பிட்ட கல் கருவிகளைப் போன்ற பழங்கால நினைவுக்குறிகள் இன்னும் நிலைத்திருந்தால், அவை தாமிரபரணி நதிக்கரையிலே இருந்திருக்க முடியாதென நான் கருதுகிறேன். ஏனெனில், ஆரம்பத்திலேயே அப்பகுதி அடிக்கடி தண்ணீர் தேங்கியும், சகதியாகவுமிருந்ததால் மக்கள் அதைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டிருக்க இயலாது; ஆனால் நதியின் பழங்காலத்துக் கரையாய் அமைந்திருக்கும் சமவெளிப் பகுதியின் இருமருங்கிலுமுள்ள மணற்பகுதியில் வாழ்ந்திருக்கலாம். இப்பகுதிபோன்றிருக்கும் புதுக்குடிக்கருகிலுள்ள ஆதித்த நல்லூரில் அதிகப்படியான முதுமக்கள் தாழிகள் முதலியன கிடைக்கின்றன. மனிதன் அந்த மாவட்டங்களில் தோன்றுவதற்கு முன்பே நிலமானது சிறுகச் சிறுக ஆனால் உறுதியாகக் கடல் மட்டத்திற்குமேல் உயர்ந்து கொண்டே வந்திருக்க வேண்டும் என்று நான் நம்புவதால், கடலுக்கு அருகே பழங்கால நினைவுக்குறிகள் எதுவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வரலாற்றுக் காலமெல்லாம் பூமியின் உயர்ச்சி அதிகமாகிக் கொண்டே வந்திருக்கிறது என்பது மெய்ப்பிக்க இயல்வது. நகரமும் பழைமையான துறைமுகமுமாகிய குலசேகரப் பட்டினத்திற்கருகே கடற்கரை ஓரத்தில் கடற்கிளிஞ்சில் இனம் நிறைந்து உண்டாக்கப்பட்ட மணற்கற்களில் உடைந்து போன மட்பாண்டத் துண்டங்கள் புதைந்து கிடப்பதைக் காணலாம். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு மைல் தொலைவிலிருந்து கிடைத்த மட்பாண்ட மாதிரிக்கல் ஒன்று என்னிடமிருக்கிறது. இக்காலத்தில் பயன்பாட்டிலிருக்கும் மட்பாண்டங்களைப் போன்றே இருக்கும் மாதிரிக்கல் அம்மட்பாண்டத்தின் அளவிறந்த பழைமையைக் குறிக்காமல், அண்மையில் தோன்றிய மணற்கல்லின் சில பகுதிகளின் தோற்றத்தையே குறிக்கின்றது.

தாமிரபரணி ஆறு

திருநெல்வேலியின் உயர்ந்த நாகரிகம் பிறந்த வரலாறு எழுதப்படின் அதில் திருநெல்வேலியின் பெரிய ஆறாகிய தாமிரபரணி மிகச்சிறந்த மதிப்பான இடம் பெறும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாகரிகமற்ற கறுத்த ஆதிக்குடி மக்களைவிட வடக்கே இருந்த உயர்ந்த சாதி மக்களைக் குடும்பம் குடும்பமாக அவ்வாற்றின் கரைகளிலே குடியேற வைத்தது இவ்வாறு தந்த வளத்தால் விளைந்த நெல்லேயாகும். மற்ற இந்திய ஆறுகளைப் போலல்லாமல் இந்த ஆறு


1. பிற்சேர்க்கை பார்க்க.