பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 152

தீர்மானித்தது. மே மாதம் 22ஆம் தேதி மக்புஸ்கான் தொடரப் பட்டாளம் மதுரையை அடைந்தது. (இப்போரின் கடுமையையும் இதில் தாக்குப்பிடித்த பூலித்தேவரின் வீரத்தையும் யான் அவர் பெயரால் எழுதியுள்ள தனிநூல் விளக்கும். ந.ச.)

இச்சந்தர்ப்பத்தில் கர்னல் ஹெரான் திருநெல்வேலி சரித்திரத்திலிருந்து மறைந்துவிடுகிறான். இதிலிருந்து அவன் மதுரையை அடைந்தவுடனே மதராசுக்கு அழைக்கப்பட்டு இராணுவக் கோர்ட்டாரால் விசாரிக்கப்பட்டு, வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கும் வாய்ப்பை நான் எடுத்துக் கொள்கிறேன்.

புதுப் போராட்டங்கள்

மதுரை திருநெல்வேலி மாகாணங்களில் இதுவரை யாரும் கண்டறியாத போர்த்திறமையுடன் யாவற்றையும் மிஞ்சக் கூடிய திறனும் வீரமும் படைத்த ஆங்கிலப் பட்டாளத்தின் பயங்கரத்தினால் அந்நாடுகளிலுள்ளவர்கள் அடக்கப்பட்டார்கள். அவர்கள் நாட்டைவிட்டு அகன்ற உடனே கூலிப்படைகள் கூடி ஒடுக்கப்பட்ட நாடுகளுக்குள் சென்று கொள்ளையடித்தன. ஆனால், அத்தலைவர்கள் அனைவரும் கூடி மக்புஸ்கானின் அதிகார வலிமையைக் குலைக்கத் தக்க வலிமையான வழிகளைக் காண கலந்தாலோசித்தார்கள். இக்காலத்திலிருந்து இந்நாடுகள் பல ஆண்டுகள் வரை தொடர்ந்து போராட்டக் களங்களாய் மாறின. எனவே. இப்போது ஏற்பட்ட குழப்பங்களை உண்டாக்கிய பல்வேறு காரணங்களையும் அவை பின்னர் எவ்வாறு அதிகரித்தன என்பதைப் பற்றியும் விவரிக்க வேண்டுவது இன்றியமையாதது.

1752 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆலம்கான் திருச்சியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த சந்தாசாகிபுக்குத் துணையாய் மதுரையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றபொழுது அவன் மதுரை திருநெல்வேலி நாடுகளை மூன்று பட்டாணிய உத்தியோகஸ்தர்களிடம் விட்டுச் சென்றான். அம்மூவரின் பெயர் மகம்மது பக்கிரி, மகம்மது மைனாக்கு, நபிகான் கட்டாக்கு என்பன. இவர்களுள் முதலாமவன் பொதுவாக மியானா என்றும், இரண்டாமவன் மூடிமையா என்றும் மொகி உத்தீன் மியான் என்றும் சாதிப் பெயரால் வழங்கப்பட்டனர். ஆனால், நபிகான் கட்டாக்கு என்பவன் தன் சொந்தப் பெயரினால் வழங்கப்பட்டு வந்தான். நாளடைவில் அவர்களே நவாபுவின் அரசை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றபோதிலும் அம்மூவரும் தாமே ஆட்சிபுரிந்து வந்தனர் என்பது தெளிவாகிறது. விடுதலை செய்தல்,