பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 158


கட்டளையிடப்பட்ட படையையும் தேவையான உதவிகளையும் அனுப்பி வைக்குமாறு காப்டன் காலியாட்டுக்குக் கட்டளையிடப்பட்டது.

இவ்வமயத்தில் பூலித்தேவர் நபிகான் கட்டாக்குடனும் மூடிமையாவுடனும் அவர்கள் கூட்டாளிகளுடனும் சேர்ந்து செயல்புரிய தொடங்கிவிட்டார்; பிப்ரவரி இடையில் நடுமண்டலம் மாவட்டங்களில் நுழைந்தனர். மதுரை நகரிற்கும் பூலித்தேவரின் இடத்திற்கும் இடையே ஏறக்குறைய மத்தியில் ஒரு பெரும்பகுதிப் படையுடையதாயிருந்தது இந்நடு மண்டலம். இந்த மாவட்டங்களை ஆண்டு வந்த கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் என்று வழங்கப்பட்டது. இது மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 45 மைலில் மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோட்டையைக் காக்க ஒரு பட்டாளம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மாவட்டங்களின் அதிகாரம் நவாபுவுக்கும் மக்புஸ்கானுக்கும் ஒன்றுவிட்ட உடன் பிறப்பாளனாகிய அப்துல்ரஹீமின் வசமிருந்தது. இவனுடனும் இவன் குடும்ப உறவினனான அப்துல் மாலியுடனும் லெப்டினண்டு இன்னிங் என்பவன் அந்நாடுகளுக்குள் 1751 ஆம் ஆண்டு புகுந்தான். இருநூறு சிப்பாய்களைத் தவிர வழக்கமாய் இருக்கும் கலகக்காரக் காலாட் படைகள் கிராமங்களைக் காக்க நியமிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதில் மக்புஸ்கானின் கீழ்ச் சிறந்த படையினர் என்று பேர்பெற்ற 500 குதிரை வீரரும் இருந்தனர். அவர்கள் தங்களுடைய வீரத்தாலும் மகம்மதியரின் இனச் சிறப்பாலும் கர்வம் கொண்டு இராணுவ அனுபவமில்லாத ஓர் இந்தியப் பகைவனை மிக்க வெறுப்புடன் எதிர்த்தார்கள். அன்றியும், தங்கள் தலைவர்களைச் சண்டையில் துணிந்து எதிர்க்கும்படி ஊக்கப்படுத்தினார்கள். அப்போரில் அவர்கள் எதிரிகளால் சூழப்பட்டார்கள். ஆனால், போதுமான ஆண்மையுடனும் அதிக இழப்புடனும் அங்கிருந்து தப்பி, ஸ்ரீவில்லிபுத்துரை அடைந்தார்கள். இங்கு அப்துல் ரஹீமும் அப்துல் மாலியும் மதுரையிலிருந்தாவது, திருநெல்வேலியிலிருந்தாவது உதவிப்படை வரும்வரை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணினார்கள். ஆனால், குதிரைப் படையினர் போதுமான சம்பளமில்லாததால், வெறுப்புக் கொண்டிருந்ததாலும், முற்றுகையின்போது உணவுத் தேவையினால் குதிரைகள் இறந்துவிடுமோ என்று அஞ்சியதாலும் படையினின்றும் விலகிச் சென்றுவிட்டனர். பலர் எதிர்ப் படையிற் சேர்ந்து கொண்டனர்; கோட்டை உடனே சோதிக்கப்பட்டது. உடனடியாகக் கோட்டையைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். இம்முறையும் இரு படைத் தலைவர்களும் தப்பி விட்டனர்.