பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 8

காவிரியாற்றைப் போன்று தென்மேற்கு, வடகிழக்குப் பருவக்காற்று மழையால் ஆண்டிற்கு இரு முறை தண்ணிர் கரைபுரண்டோடி முழுவெள்ளத்துடன் காட்சியளிக்கும். அது சிறிய செழிப்புவாய்ந்த வண்டல்மண் சமவெளியில் பாய்ந்து ஓடுகிறது. இப்பகுதி இயற்கை ஆற்றல்கள் இப்போதிருந்ததைவிட வலிவுள்ளனவாய் இருந்த காலத்தில் (இயற்கை வளத்தின் நிலையையும் காலக்கண் கொண்டு ஒப்பீடு செய்யும் கால்டுவெல்லாரின் உணர்வை என்னென்று போற்றுவது - ந.ச.) இவ்வாற்றாலேயே ஏற்பட்டுப் பிற்காலத்தில் வண்டல்மண் படிந்த பகுதியாகியது. அது வேகமற்றுத் தடைபடாத ஆறாய்க் கடலைநோக்கி ஒரு படுகை வழியாக மெல்ல ஓடுகிறது. இப்படுகை ஆண்டாண்டுதோறும் மிகமிக ஆழமான பள்ளத்தாக்காகி வேளாண்மைக்குதவாத பகுதியாவதற்குப் பதிலாக, ஆண்டாண்டு தோறும் சிறிது சிறிதாக வண்டல்மண் படிய ஆரம்பித்தது. அதனால், நாளடைவில் அவ்வாறு பாயும் கீழ்ப்பாதிப் பகுதியில் பாளையங்கோட்டைக்கும் கடலுக்கும் இடையே செயற்கைக் கரைகள் கட்டி, அவை வழியாக அவ்வாறு ஓடும்படிச் செய்ய வேண்டியதாயிற்று. எனவே, ஆரம்பத்திலேயே இல்லாவிட்டாலும் அந்த மாவட்டங்களில் மனித நடமாட்டம் ஏற்பட்டு அவர்களும் ஒழுங்காக வேளாண்மை செய்து, நீர்ப்பாசன வசதியால் நெற்பயிரிட ஆரம்பித்து முதற்கொண்டு இத்தகைய ஆறு குடியேற்ற மக்களின் கருத்தைக் கவர்வதாயிற்று.

தாமிரபரணியின் தோற்றம்

தாமிரபரணி ஆறு ‘பொதிகை’ என வழங்கப்படும் திரிகோணமலையில் தோன்றுகிறது. பொதியம் அல்லது பொதிய மாமலை என்பதற்கு (பொதிந்து கிடக்கும்) இரகசியமான இடம் என்பது பொருள் (கால்டுவெல் கண்ட இவ்வேர்ச் சொல் விளக்கம், சித்தர் ஆய்வாளருக்குச் சிறந்த அமிழ்தம் - ந.ச.). அது பற்றிய விளக்கம் பின்தொடரும். சிறிய மலைகளாகிய ஐந்து தலைகளையுடைய ஐந்து தலைப் பொதிகையினின்றும் வேறாக்கிக் குறிப்பிடுவதற்காகப் பெரிய பொதிகை என்று அம்மலை அப்பகுதியில் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மலைத்தொடரில் 6800 அடி உயரமுள்ள இந்த மலையே அதிக உயரமானது. உள்நாட்டுப் புலவர்களால் பாண்டியர்களின் மலை என்று புகழப்பெற்றது. இதனால், பாண்டிய அரசனுக்குப் ‘பொதிகைத் தலைவன்’ என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதன்மேல் உற்பத்தியாகி வரும் தாமிரபரணி ஆறு சமவெளியில் பாய்வதற்கு முன்னே பெரும்படியான மலைநாடுகளில் ஒடிப் பாய்வதற்கேற்றவாறு இந்த மலையானது மற்ற மலைகளைவிட ஏறக்குறையப் பத்து மைல்