பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171 கால்டுவெல்


ஆசைப்பட்டு முதலீடு செய்தார்கள். அமைதியாய் வாழ்ந்த மக்களைத் தொந்தரவு செய்தார்கள். அப்பொழுது அதிகமான எல்லையுடைய தலைவர்கள் ஆயுதம் தாங்கிய வீரரை வைத்திருந்தார்கள். அவர்கள் கலகம் தோன்றிய உடனே அவர்களுடைய ஒப்பந்தப் பணத்தைச் செலுத்தாது நிறுத்திவிட்டார்கள். அந்தத் தலைவர்களும் அவர்களுடைய மக்களும் பாளையக்காரர் என்று வழங்கப்பட்டனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை 32. ஆனால் அவர்கள் ஒழுங்கான பயிற்சியற்ற முப்பதாயிரம் வீரர்களைத் திரட்டிப் போருக்கு அனுப்பத்தக்க திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் நகரங்களுக்கு அரணிட்டார்கள். மலைகளில் கோட்டைகளைக் கட்டினார்கள். அவசரச் சமயங்களில் இங்கு அவர்கள் வந்து தங்குவார்கள். திருநெல்வேலியின் வடவெல்லையாய் அமைந்த மலையடிவாரத்திலுள்ள நாடுகளை அந்தப் பாளையக்காரர்கள் பெற்றிருந்ததன்றி அவர்களுள் பலர் மட்டமான நிலங்களுடைய நாடுகளையும் அதிகமாகப் பெற்றிருந்தனர். உழைப்பை வெறுத்ததால், அவர்களுடைய உடைமைகள் பாழாயின. துன்பமடைந்த அவர்கள் மற்றவர்களை முற்றுகையிட்டும் சுறுசுறுப்பான அக்கம்பக்கத்து உழைப்பாளிகளைக் கொள்ளையடித்தும் வந்தார்கள். இந்தக் கலகக்காரர்களின் பயங்கர நிலை இப்படி இருந்ததால், மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டமும், அதிகப்படியான வரிகளைக் கொடுக்கும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டு, அவர்களுடைய துன்பத்தை வரிகொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.

குத்தகைக் கொடுமை

இத்தகைய நிலைமையில் உங்கள் சூப்பிரண்டு இர்மின் எவ்வாறு விளைச்சலையும் மீறிய அவ்வளவு அதிகமான வரியைக் குறிப்பிடாத காலத்தில் வசூலிக்க முடியும் என்பதை இயற்கை வசதிகளிலிருந்து நீங்களே கணக்கிட்டு அதிசயிக்க வேண்டியதுதான்.

பாளையக்காரரின் எதிரியாகிய குத்தகைக்காரர்களைப் பற்றிக் குறிப்பிடாது விட்டால் பாளையக்காரனுக்கும்கூட நான் அநீதி செய்தவனாவேன். இங்கு மறுபடியும் நான் கர்னல் புல்லர்ட்டனுடைய வேகம் நிறைந்த வரிப்பட வர்ணனையைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நம் காலத்தில் பாளையக்காரர்கள் அமைதியான வாரிசுகளாகிய ஜமீந்தார்கள் மூலம் நம்முடன் வாழ்கிறார்கள். ஆனால், கர்னல் புல்லர்ட்டன் காலத்திலும் நவாபுவின் ஆட்சிக்காலத்திலும் குத்தகைக்காரர்கள் இருந்தது மிக்க பயங்கர உண்மை எனினும், அவர்கள் சந்ததி வாரிசு அற்று வழக்கத்திலிருந்து முழுதும் மறைந்துவிட்டது.