பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9 கால்டுவெல்

தூரம் பின்புறம் பரவலாய் அமைந்துள்ளது. திருநெல்வேலியின் தலைநகராகிய பாளையங்கோட்டையிலிருந்து பார்த்தால் பொதியம் நன்றாகத் தெரியும். மலைத் தொடரின் மேற்குப் பக்கத்திலுள்ள திருவாங்கூரின் தலை நகராகிய திருவனந்தபுரத்திலிருந்து பார்த்தால் இது இன்னும் தெளிவாகத் தெரியும். அகத்திய மாமுனிவர் தென்னாட்டை நாகரிகமடையச் செய்த பின்னர் (? ! - ந.ச.) உலகத்தினின்றும் விலகி இம்மலையிலுள்ள எட்டாத குகையினுள் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டமையால் இம்மலை சாதாரணமாக ‘அகஸ்தியர் மலை’ (அகத்தியர் பற்றி ஒரு தனிப்பெரும் கலைக்களஞ்சிய ஆராய்ச்சியே இன்று தேவை. இவ்வாராய்ச்சியின் விளைவாக இனக்கொள்கைகள் முதலாக மெய்ப்பொருளியல் ஈறாகப் பல விளக்கமுறும். இது தமிழாராய்ச்சிக்கு மட்டுமின்றி, இந்திய மனிதகுல மேம்பாட்டிற்கே இன்றியமையாதது - ந.ச.) என்றே வழங்கப்படுகிறது. அல்லது, ஆங்கிலேயர்களால் ‘அகஸ்தியர்’ என்று மட்டுமே வழங்கப்படுகிறது. அகஸ்தியர் தமது இருப்பிடத்தை மந்திர வலிமையால் அரண் செய்து கொண்டமையால் அம்மலையானது மனிதனுக்கு எட்டாதது என்று உள்நாட்டாரால் நெடுங்காலம் நம்பப்பட்டு வருகிறது. ஆனால், ஐரோப்பியர் அடிக்கடி அம்மலை உச்சிக்குச் சென்று வழி ஏற்படுத்தினர். சில ஆண்டுகட்கு முன்னர் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஒன்று மலையுச்சியினருகே திருவாங்கூர் மன்னரின் வானியலறிஞராகிய டாக்டர் ப்ரெளன் என்பவரால் கட்டப்பட்டது. ஓராண்டுக்கு மலையுச்சியில் 300 அங்குலம் மழை பெய்ததாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மலைக்கும் கடலுக்குமிடையே பாதித் துரத்திலுள்ள பாளையங்கோட்டையில் 27 அங்குலத்திற்குக் குறைவான மழையும் திருநெல்வேலிச் சமவெளியில் பொதுவாகச் சராசரி 25 அங்குல மழையும் பெய்கிறது.

இதனாலேயே குறைவான மழையாலும் அதிகமான வெப்பத்தினாலும் அதிக தண்ணீர்வற்றிப் போவதாலும் திருநெல்வேலி சமவெளிகள் மிக வறண்டும் உலர்ந்தும் இருந்த போதிலும், தாமிரபரணி வற்றாத வளமான தண்ணீருடன் ஆண்டில் இருமுறை வெள்ளத்துடன் கடலை நோக்கிப் பாய்கின்றது. அது பாயும் செம்மையான நிலங்களில் ஏராளமான தானியங்களை இருமுறை பயிரிடத்தக்க செழுமையைக் கொடுக்கின்றது. இது காரணமாக, நிலத்தின் விலைமதிப்பிற்கேற்ற வரித் தொகை வரவில் திருநெல்வேலிக்கும் தஞ்சாவூருக்குமிடையே மிகுந்த ஏற்றத் தாழ்வு இருப்பினும், திருநெல்வேலி தஞ்சாவூருக்கு அடுத்த நிலையைப் பெற்றிருக்கிறது.