பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175 கால்டுவெல்



இயல் - 5

முகம்மது யூசுப்கானின் ஆட்சி முதல் மதுரை கைப்பற்றப்பட்டு அவன் மறைவு வரை

முகம்மது யூசுப்கானின் தொடர்ந்த போர் இயக்கங்கள்

நாம் இப்பொழுது ஒரு நிமிடம் 1756 ஆம் ஆண்டிற்கு திரும்பிச் செல்வோம்.

'அருகிலுள்ள பாளையக்காரர்கள் திறை செலுத்தும் வரை அல்லது அவர்கள் அமைதியாய் இருக்கும் வரை ஜூன், ஜூலை மாதங்களில் யூசுப்கானும் மக்புசுகானும் அவரவர் படைகளுடன் திருவில்லிபுத்துரில் தங்கினார்கள். மக்புசுகானுடைய உடன்பிறப்பாளனான நவாபு, மக்புசுகானின் இராணுவப் பணிக்குச் செலுத்தவேண்டிய பாக்கியைக் கணக்கிட்டு ஒழுங்கு செய்வதற்குத் தயாராயிருந்ததால், அவன் கட்டளைப்படி யூசுப்கான் மக்புசுகானை அவன்படையுடன் நாட்டை விட்டு ஆர்க்காட்டிற்குச் செல்ல வேண்டிக் கொண்டான். பின்னர், அவன் திருவில்லிபுத்துரை அரண் செய்து காக்கவும், அருகிலுள்ள நாட்டைக் காவல் புரியவும் ஆறு படைப் பிரிவினரை நியமித்தான். நவாபுவினால் திரட்டப்பட்டு மக்புசுகானுக்கு உதவி செய்ய அனுப்பப்பட்ட படையினரையும் சேர்த்து மிஞ்சிய சுமார் ஈராயிரம் வீரருடன் திருவில்லிபுத்துரிலிருந்து ஆகஸ்டு முதல் நாள் புறப்பட்டு, பத்தாம் நாள் திருநெல்வேலி நகரத்தை அடைந்தான்.

அதற்குள் இந்த நாடுகளின் ஆட்சிக்கான ஏற்பாடுகளைச் சென்னை மாகாணத் தலைவர் செய்து விட்டார்; இதற்காகவே ஏப்பிரல் மாதத்தில் சென்னைக்கு வந்திருந்த திருநெல்வேலி முதலியாரிடம் அவர் ஒப்பந்தத்தை முடித்துவிட்டார். மதுரை மாவட்டப் பகுதி விளைச்சலுக்குத் தகுதியற்ற நிலப்பகுதி எனக் கருதப்பட்டது. (அந்நாள் அம்மாவட்ட வேளாண்மை நிலையை இது அறிவிக்கும். - ந.ச.)