பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177 கால்டுவெல்


மாற்றிகளைப் பிணையாகக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டான். ஜூலை ஆரம்பத்தில் உடன்படிக்கை முடிவுற்றது. உடனே முதலியார் பிரதிநிதிகளை நியமித்துப் பயிர் செய்யப்பட்ட நிலங்களிலெல்லாம் கம்பெனியின் வண்ணக் கொடியை ஏற்றும்படி உத்தரவு பிறப்பித்தான். அடுத்தபடி சீக்கிரத்திலேயே தானே நேரில் அலுவல்களைக் கவனிக்கப் புறப்பட்டான். முகம்மது யூசுபு திருநெல்வேலியை அடைந்ததும் அங்கு ஏற்கெனவே மக்புசுகானுக்குப் பதிலாக நிருவாகம் செய்து வந்த மீர் ஜாபர் என்பவனால் முதலியாரின் பிரதிநிதிகள் வேலை ஆரம்பத்திலேயே அடக்குமுறை செய்யப்பட்டு அவமானப்படுத்தப் பட்டிருந்ததைக் கண்டான். இத்தகராறுகள் வெளிப்படையாக முடிந்துவிட்ட போதிலும் உட்பகை மட்டும் இருந்து வந்தது. மேலும் தகராறுகள் வளராவண்ணம் தடுப்பதற்காக முகம்மது யூசுபு மீர்ஜாபரை, உடனே மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லக் கட்டளையிட்டான். ஆனால், அவனுடன் அவனுக்கு உரிமையான மூன்று பீரங்கிகளையும் அவன் விரும்பிய பரிவாரங்களையும் கொண்டு செல்ல அனுமதித்தான். அதேசமயத்தில் ஐந்து சிப்பாய்ப் படையை மதுரை இராணுவப் படைக்குத் துணையாக அனுப்பி, வழியில் மீர்ஜாபரையும் அவனுடைய மக்களையும் கவனித்துக் காக்கும்படிக் கட்டளையிட்டான். இதற்குள் வேறு குத்தகைக்காரனை நியமித்தது தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணிய மக்புசுகான் சார்பில் மதுரைக் கோட்டையில் ஒருவிதக் கலகம் ஏற்பட்டது. செப்டம்பர் 13 ஆம் நாள் புதுக் குத்தகைக்கார முதலியார் திருச்சியிலிருந்து இரு மறவர் நாடுகள் வழியாய் இரண்டு சிப்பாய்ப் படைகளின் மெய்காப்புடனும் பாசறைக்கு வந்து சேர்ந்து மறுநாள் திருநெல்வேலியை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

நாட்டைக் குத்தகை எடுக்கும் தொழில் காரணமாக முதலியார் குடும்பம் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையக்காரர் பலருடன் முக்கியமாகப் பூலித்தேவர் கட்டபொம்ம நாயக்கன் முதலியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது. அவன் அழைப்பின்படி பூலித்தேவர் உள்ளிட்ட பலர் அவனை வழியில் சந்தித்தனர். கட்டபொம்ம நாயக்கனும் மற்றவர்களும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள். எல்லாரும் வழக்கப்படி ஏராளமானப் பரிவாரங்களுடன் வந்தனர். இந்தக் கூட்டத்தினர் பின் தொடர முதலி செப்டம்பர் 27 ஆம் நாள் திருநெல்வேலி நகரத்தை அடைந்து, தன் அதிகாரத்தைப் பறையறைந்து தெரிவித்தான். ஆனால், பாளையக்காரரின் கூலிப் பட்டாளங்கள் திருடுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் நகரத்திலும் அடுத்துள்ள கிராமங்களிலும் இரவுக் கொள்ளைகளை நடத்தி வந்தன. பட்டாளத்தினருள் பலரைக் கம்பெனிச் சிப்பாய்கள்