பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 178

 பிடித்துத் தண்டித்தார்கள். அதனால், மற்றவர்கள் சிப்பாய்களின் உடைமைகளைத் தாங்களே எடுத்துக் கொண்டார்கள். பொருளிழப்பாலும் புகழ்க் கேட்டாலும் சீற்றமடைந்த அவர்கள், தங்கள் வெறுப்பை முதலியின் மீது திருப்பினார்கள். ஏனெனில், முதலியே பாளையக்காரர்களை நகரத்தில் தங்கும்படி செய்து, அவர்களை மரியாதையுடன் கவனிக்கத் தொடங்கினான்.

புது உடன்படிக்கை

அதே நேரத்தில், திருவாங்கூர்ப் படைகள் களக்காட்டுக்கு அருகேயுள்ள மாவட்டங்களின் மேல் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துவிட்டன. மூடிமையா கொலை செய்யப்பட்ட தோல்விக்குப்பின் மறைந்திருந்த நபிகான் கட்டாக்கு வெளிப்பட்டு, மக்புசுகானுடன் உடன்படிக்கை செய்து கொண்டான். அவன் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. மக்புசுகான் கலைத்துவிட்ட 400 குதிரை வீரரை மீண்டும் பட்டாளத்தில் சேர்த்துக் கொண்டான். அது மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே செல்வதற்காக அமைக்கப்பட்டது. இவ்வாறிருக்க, திருநெல்வேலியில் கம்பெனிச் சிப்பாய்களுக்கும் அவர்களுடைய குத்தகைக்காரனுக்கும் ஏற்பட்ட கலகம் வளர்ந்து தீய பயன்களைக் கொடுத்தது. உடன்படிக்கையின் படி, முதலி அவனிடம் வேலைக்கமர்த்தப்பட்ட சிப்பாய்களுக்குச் சம்பளம் கொடுக்க மட்டுமே கடமைப்பட்டவன். ஆனால், மகம்மது யூசுபு - தவறுதலாக - முதலி குத்தகைப் பிரதேசத்திலுள்ள எல்லாச் சிப்பாய்களையும் காப்பாற்றக் கடமைப்பட்டவன் என்று எண்ணிக் கொண்டான். மேலும், அவன் நாட்டை அடைந்தபோது இரண்டு மாதச் சம்பளம் கொடுக்கப்படாமலிருந்ததாகவும் கருதினான். இத்தவறு காரணமாக, திருநெல்வேலியிலுள்ள சிப்பாய்களின் தலைவன் ஜமால் சாகிபு பணத்தைக் கேட்டான். முதலி மறுத்ததும் அவனைக் காவலில் பல நாள்கள் வைத்துவிட்டு பூலித்தேவர் முதலிய பாளையக்காரர்களை உடனே நாட்டைவிட்டுப் போக வேண்டும், மேலும் இங்கே இருந்தால் அச்சம் தரத்தக்க தண்டனைகள் கொடுக்கப்படும் என்று வெருட்டிவிட்டான். அவர்கள் உடனே நாட்டை விட்டுப் புறப்பட்டார்கள். ஆனால், பூலித்தேவர் வீடு திரும்புவதற்குப் பதிலாக நபிகான் கட்டாக்கிடம் சென்று அவனுக்குப் பண உதவியும் செய்வதாகக் கூறினான். அவர்கள் கூட்டத்தில் கட்டபொம்ம நாயக்கனையும் சேரும்படித் தூண்டினர்.

அதே சமயத்தில் திருவாங்கூர்ப் படைகள் அங்கிருந்து புறப்பட்டுக் களக்காட்டைச் சேர்ந்த மாவட்டங்களைக்