பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 180


மலையில் இதுவரை தங்கியிருந்த மகம்மது யூசுப்கானுக்கு எதிரிகளின் படைத்தாக்குதலைப் பற்றி எந்தவிதமான குறிப்பான செய்திகளும் கிடைக்கவில்லை. படை புறப்பட்ட நான்கு நாள்களுக்குப் பிறகுதான் பகைவரின் படையெடுப்பைப் பற்றி அறிந்தான்; உடனே படைவீட்டைக் கலைத்துத் திருநெல்வேலி நோக்கி விரைந்தான். அவன் வருகையை உணர்ந்த பகைவர், தங்களுடைய எல்லாக் கூட்டத்தினரையும் சேர்த்துக் கொண்டு அவனை எதிர்த்துப் போரிட முன்னேறினர். இருதிறத்தினரும் டிசம்பர் முதலாம் நாள் திருநெல்வேலிக்கு வடக்கே இருபது (இப்போது 12) மைல் தூரத்திலுள்ள கங்காதரத்தில் சந்தித்தனர். கங்காதரம். இது கங்கை கொண்டானைக் குறிக்கும். சாதாரணமாக ஆங்குண்டான் என்று வழங்கப்படும் ஒரு கிராமம். சித்திராநதி அல்லது சித்தாற்றிலுள்ளது. அதனருகே ஓர் இரயில் நிலையமும் உண்டு. கங்கைகொண்டான் - அதாவது கங்கையைக் கொண்டவன் என்பது பெயர். சிவன் அப்பெயருடன் வணங்கப் பெற்றபோது கங்கை மறுபடியும் தோன்றியதுபோல் இங்கும் தோன்றினாள் என்று பொதுவாக ஒரு நம்பிக்கை உள்ளது. இப்பெயரின் வடமொழிப் பெயர் கங்காதரன். ஓர்ம் என்பாருடைய அறிவிப்பாளர்கள் - பின்பற்றுபவர்கள் தமிழுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தினார்கள். ஒரு வேளை தஞ்சாவூர் நாட்டில் அதே பெயரில் ஒரு நகரம் இருப்பதே காரணமாயிருக்கலாம். கங்கைகொண்டான் என்ற பெயரையுடைய சோழ இளவரசன் ஒருவன் இருந்தான். அவன் சுந்தரசோழ பாண்டியன் என்ற பட்டத்துடன் அரசனாக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது. (கால்டுவெல்லுக்கு ஏற்பட்ட ஆராய்ச்சிக் குழப்பத்துக்கும் ஆரிய மாயைக்கும் சரியான சான்று இப்பகுதி - ந.ச.). ஏவலர்களின் எண்ணிக்கையின் குறைவை அவர்களுடைய அளவற்ற ஆற்றல் திறன் நிறைசெய்தது. கம்பெனிப்படை எதிரிகளை முறையோடும் சூழ்நிலை நலன்களுடனும் ஒவ்வொரு பகுதியிலும் தாக்கின. திறமையுடன் பீரங்கிகள் குதிரைப் படையை நோக்கி வெடிக்கப்பட்டன. குதிரைப்படையினரின் நல்வினை குதிரைகளையே பொறுத்திருந்தமையால், அவர்கள் போராட்டத்தை நிறுத்திப் போர்க்களத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். மறுநாள் மகம்மது யூசுப்கான் திருநெல்வேலிக்குப் புறப்பட்டான். அங்குள்ள பாழான மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களின் மனத்தில் ஊக்கத்தை ஊட்டுவதற்காகவும் திரும்பவும் நாட்டிற்குச் சென்று அவர்கள் தொழில்களைக் கவனிக்க அழைப்பு விடுக்கவும் அம்மாவட்டங்கள் வழியாகச் சென்றான்.

பாளையக்காரர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினார்கள்.