பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185 கால்டுவெல்


மூலம் சொல்லி அனுப்பினான். லெப்டினண்டு ரம்போல்டு இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொண்டான். அப்பொழுது காலியட்டு, திருச்சிராப்பள்ளியைக் காப்பாற்றச் சென்று திரும்பி வந்திருந்தான். இச்செய்தி கவனத்திற்குரியதென எண்ணிச் சிப்பாய் ஜமேதாராகிய இராமநாயக்கையும் புத்திக் கூர்மையுள்ள மூர்மானையும், மக்புசுகானை அவன் படைவீட்டில் சந்தித்துக் கலந்தாலோசிக்க அனுப்பினான். அவர்கள் 50 சிப்பாய்களின் துணையுடன் சென்றார்கள். ஆனால், அவர்கள் அங்குப் போய்ச் சேர்வதற்குள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய இரண்டிடங்களிலும் வைக்கப்பட்டிருந்த 12 சிப்பாய்க் கூட்டங்களில் ஆறு கூட்டம் மதுரையிலுள்ள பட்டாளத்துடன் வந்து சேர வேண்டும் என மக்புசுகானுக்குக் கட்டளை வந்தமையால் அது அவன் திட்டங்களையெல்லாம் மாற்றிவிட்டது. அவனிடம் வந்த இரு சமாதானப் பிரதிநிதிகளிடம் உடன்படிக்கை செய்து கொள்வதற்குப் பதிலாக அவர்களையும் குதிரை வீரரையும் தன் படைகளாற் சூழ்ந்து கொண்டு, பாளையங் கோட்டையிலுள்ள சிப்பாய்களுக்கு உடனே கோட்டையை மக்புசுகானிடம் கொடுக்க வேண்டுமெனச் செய்தி அனுப்பும்படி பயமுறுத்தினான். அப்படிச் செய்யாவிடில் அவர்கள் அனைவரையும் அப்போதே தன் வாளுக்கு இரையாக்கிவிடுவதாகவும் அச்சுறுத்தினான். ஆனால், பிரதிநிதிகளோ, சண்டை செய்யத் தயாரானதுமன்றி அவ்வாறு செய்தி அனுப்புவதைவிடத் தாங்கள் இறப்பதற்குத் தயாரெனத் தெரிவித்தார்கள். சண்டை ஆரம்பிக்கும் சமயத்தில் மக்புசுகானுடைய சமேதார்களில் ஒருவனாகிய அலிசாகிபு என்னும் பெயரையுடையவன், மக்புசுகானின் சூழ்ச்சியை அறிந்து வெறுப்படைந்து, தன் அதிகாரத்திலிருந்த குதிரைப் படையுடனும் சிப்பாய்ப் படையுடனும் சேர்ந்து தன் வெறுப்பை வெளிப்படுத்தினான். உடனே எஞ்சியவர்கள் ஒன்றுகூடிப் பின்வாங்கினார்கள். ஆனால், அலி சாகிபு பிரதிநிதிகளுக்கு மேலும் துன்பம் நேரிடலாமென ஐயப்பட்டு, அவர்களுக்குத் துணையாகப் பாளையங்கோட்டை வரை சென்று, அவர்களை அங்குப் பத்திரமாகச் சேர்த்துவிட்டு வந்தான்.

கட்டபொம்மன் உதவி

ஆறு கம்பெனிச்சிப்பாய்க் கூட்டங்கள் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குச் சென்றவுடனே எதிரிகள் நுழைந்த நகரங்களில் அறுவடை ஆரம்பமாயிற்று. அங்கு மக்புசுகான் தன் அதிகாரத்தை நிலைநாட்டினான். இதைப் பயன்படுத்தி அவன் பிரதிநிதிகளும் ஏவலர்களும் பெருங் கொடுமைகளையும் அநீதிகளையும் செய்து